திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு
திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, முனைவர் பி. யோகீசுவரன், நீலா பதிப்பகம், சென்னை, பக்கம் 344, விலை 175 ரூ.
விடுதலை பெற்ற பின்னர் சுதந்திர இந்தியாவில், மொழிவாரி மாநில மறு சீரமைப்பு நடந்தபோது, தமிழ்நாட்டின் வடக்கெல்லை, தெற்கெல்லையில் தமிழர்கள் வாழ்ந்த மிகப்பெரிய நிலப்பரப்புகளை ஆந்திரத்துடனும், கேரளத்துடனும் இணைக்கும் அநீதி நிகழ்ந்ததையும், அதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் நடத்தப்பெற்றதையும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதையும் நாடறியும். அப்போது நிகழ்ந்த தெற்கெல்லை மீட்புப் போராட்ட வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கும் விதமாக, இந்த நூல் எழுதப்பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க திருவிதாங்கூர் – கொச்சி முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை எடுத்த தவறான நடவடிக்கைகளை, அவர் சார்ந்திருந்த பிரஜா சோஷலிஸ்டுக் கட்சிப் பொதுச்செயலர் டாக்டர் ராம் மனோகர் லோகியாவே கண்டித்தார். பட்டம் தாணுப்பிள்ளையைப் பதவி விலகச் சொன்னார் என்பது வரலாறு. பல்வேறு ஜாதி, மதத்தினராகப் பிரிந்து கிடந்த தமிழர்கள் ஒன்றுபட்டு, உரிமைக்குரல் எழுப்பிப் போரிட்ட இந்த உன்னத வரலாற்றையும், அதற்கு உறுதுணையாக நின்றுதவிய தலைவர்கள், தமிழ்க்குடிப் பெருமக்கள், அறிஞர்கள், பத்திரிகைகள், குறிப்பாக ‘தினமலர்’ நாளேட்டின் பங்களிப்பு பற்றியெல்லாமும் விரிவாக எழுதியுள்ளார் யோகீஸ்வரன். போராட்டத்தில் பங்குபெற்ற பிரபலங்கள் பலரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. திருவிதாங்கூர் தமிழர்கள், தமிழ்நாட்டுடன் இணைய நடத்திய போராட்டம், தியாக வரலாறுகளைக் கூறுவதுடன், இன்றைய இலங்கைப் பிரச்னை, நதிநீர்ப் பங்கீட்டில் கேரளம், கர்நாடகம் ஏற்படுத்தும் சிக்கல்களையும் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகிறது இந்நூல். – கவுதமநீலாம்பரன்
—
தினம் ஓர் அமுதமொழி (பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்), ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை – 4, பக்கம் 396, விலை 65 ரூ.
ஸ்ரீராமகிருஷ்ணரின் போதனைகளில், 366 அமுத மொழிகளைத் தேர்ந்தெடுத்து, தினம் ஓர் அமுதமொழியைப் படித்துச் சிந்திக்கும்வகையில், பனை ஓலை நறுக்கு வடிவில் கைக்கு அடக்கமாகக் கெட்டியான அட்டையுடன், இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றனர். அன்பர்கள் அனைவரும் அவசியம் வாங்கிப் படித்துப் பாதுகாக்கவேண்டிய நூல். – மயிலை சிவா நன்றி: தினமலர் 14-10-12