தில்லை என்னும் திருத்தலம்
தில்லை என்னும் திருத்தலம், சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 110ரூ.
நடராஜரின் திருவுருவம் மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியது என்பார்கள். நடராஜ பெருமானுக்கு முக்கியத்தும் தரும் தில்லை திருக்கோயில் வெளிப்படுத்தும் தத்துவமே சிதம்பர ரகசியம். பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை, காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி, நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயங்கள், ஒரே நேர்கோட்டில் சரியாக, 79 பாகை, 41 கலை கிழக்கில் தீர்க்க ரேகையில் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டி, இது பொறியியல், புவியியல், வானவியலின் உச்சகட்ட அதிசயம் என்று எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். செர்ன் என்ற அறிவியல் ஆய்வகம் கடவுள் அணு (ஹிக்ஸ்போசான்) என்ற நுண்ணிய அணுவைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தது. இந்த அணு சிவனின் நடனத்துடன் தொடர்புடையது என்றும் தெரிவிக்கிறார்கள். நடராஜர் மூர்த்தம் நான்கு திசைகளிலும் கையை வீசி ஆடுவதாக அமைந்ததாகும். தமருகம் படைப்புகளில் முதல் படைப்பான ஒலியை எழுப்புவதாகும். இந்த உடுக்கை எழுப்பும் சப்தம் பிரபஞ்சம் தோன்றும்போது எழுந்த முதல் சப்தமாகும். விஞ்ஞானிகள் இந்த ஒலியை பிரணவம் எனப்படும் ஓம் ஒலியாகக் காண்கிறார்கள். இப்படியாக நடராஜரின் தோற்றம், வரலாறு, விஞ்ஞான – மெய்ஞான இணைப்பு, தில்லைக் கூத்தனை வழிபட்டு வளம் பெற்றவர்கள், திருவிழாக்கள், திரப்பணிகள், சிதம்பரம் திருக்கோயிலில் காணப்படும் ஓவியங்கள், சிற்பங்களின் அழகு, அவை தரும் ஆச்சரியங்களுடன் நடராஜர் ஆடும் நூற்றியெட்டுக் கரணங்களையும் படத்துடன் விளக்கி இருப்பது அருமை. நன்றி: தினமணி, 29/6/2015.