தி.க.சி.வின் நாட்குறிப்புகள்
தி.க.சி.வின் நாட்குறிப்புகள், சந்தியா பதிப்பகம், சென்னை.
கம்யூ. இலக்கிய வட்டத்தின் பெயர் கலைஞர் கழகம் சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் தி.க.சி.யின் நாட்குறிப்புகள். அவர் 1948ம் ஆண்டு எழுதிய நாட்குறிப்பை தேடிப்பிடித்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம். ஒருவரின் டைரி அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி இருக்கும். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த தருவாயில் தி.க.சி. எழுதிய டைரி அவரை பற்றியோ அவர் குடும்பத்தைப் பற்றியோ இல்லை. நண்பர்களை பற்றியும், அவர் படித்த நூல்களைப் பற்றியும் மட்டுமே உள்ளது. ஓராண்டு மட்டுமே இந்த நாட்குறிப்பை எழுதியுள்ளார். நேற்று வெளிவந்த புத்தகத்தை, இன்றே படித்துவிடும் பழக்கம் அவரிடம் இருந்துள்ளது. அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர், சண்முகம் பிள்ளை அண்ணாச்சியை பற்றி நிறைய எழுதியுள்ளார். கம்யூனிஸ்டுகளின் இதழ்களோடு திராவிட நாடு இதழையும் தி.க.சி. படித்துள்ளார். அப்போது கம்யூனிஸ்டுகளின் இலக்கிய வட்டத்துக்கு, கலைஞர் கழகம் என, பெயரிட்டுள்ளனர். இன்று அதை தெரிந்துகொள்வோருக்கு, அதிர்ச்சியாகத்தான் இருக்கும். பாரதி, பாரதிதாசன், ஜீவா போன்றோரின் நூல்களை தினந்தோறும் படித்துள்ளார். அதோடு, ஆங்கில நாவல்களின் மொழிபெயர்ப்புகளையும் வாசித்துள்ளார். அவரது இந்த வாசிப்புதான் பிற்காலத்தில் அவரை, சிறந்த இலக்கிய விமர்சகராக மாற்றியது என்பதில் ஐயமில்லை. மேலும் தொழிற்சங்கத்தில், இரு ஆண்டுகள் தீவிரமாக பணியாற்றியது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அச்சு ஊடகங்கள் வளர்ச்சி பெறாத காலகட்டத்திலேயே, வாசிப்பு பழக்கத்தை கொண்டிருந்தார். தமிழகத்தில் 1950களில் தான் வாசிப்பு பழக்கம் வந்தது என, சான்றுகள் இருந்தாலும், அதற்கு முன்பே தி.க.சி. மிகச்சிறந்த வாசிப்பு பழக்கம் உள்ளவராக இருந்துள்ளார் என்பது, அவரது நாட்குறிப்புகளிலிருந்து தெரிகிறது. ஒரு தனிமனிதனின் டைரி எப்படி இருக்க வேண்டும் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்லி சென்றுள்ளார் தி.க.சி. தொ. பரமசிவன், பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். நன்றி: தினமலர், 15/6/2014.