தீப்பற்றிய பாதங்கள்
தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர்.நாகராஜ், தமிழாக்கம்-ராமாநுஜம், புலம், சென்னை, விலை 350ரூ.
கர்நாடகத்தைச் சேர்ந்த டி.ஆர்.நாகராஜ் கல்விப்புல வட்டாரத்தில் சர்வதேச கவனத்தைப் பெற்றவர். அவர் கன்னட மொழியில் குறிப்பிடத்தக்க தலித் விமர்சகராகவும் செயல்பாட்டாளராகவும் விளங்கினார். இலக்கியத் துறைப் பேராசிரியரான நாகராஜ், சமூக அரசியல் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்போது இலக்கியம் வெளிச்சத்தைக் கொடுக்கும் விளக்காக இருக்க முடியும் என்று நம்பியவர். அறிவை ஒழுங்கமைத்துக்கொள்ள கதை சொல்லல் சிறந்த வழியென்று முன்மொழிந்த அவர், தன்னுடைய கட்டுரைகளையும் கதைகளாகவே வடிவமைத்தார். வாதங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில் தனது தனிப்பட்ட அனுபவங்களையும் நாட்டாரியல் கதைகளையும் உதாரணங்களாகக் கையாண்டார். அவரது கட்டுரைத் தொகுப்பின் தலைப்பான தீப்பற்றிய பாதங்கள் என்பது அவ்வாறு ஒரு நாட்டார் கதையிலிருந்துதான் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரைகள் இலக்கியப் பனுழுவல்களைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன. அரசியல், சமூகவியல் ஆய்வுகளை வழிநடத்தும் மேற்குலகக் கோட்பாடுகளைத் தவிர்த்த நாகராஜ், அவற்றுக்கு மாற்றாக இந்தியாவின் தத்துவ மரபைப் பொருத்திப் பார்க்கவும் முயன்றார். இந்திய தத்துவ மரபு வைதீகத்திற்கு மட்டுமே உரிமை கொண்டாக ஒருபோதும் இருந்ததில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தமிழில் ஏற்கெனவே டி.ஆர். நாகராஜ் அறிமுகமாகி இருந்தாலும் பெரும்பாலும் உதிரி மேற்கோள்களாகவே பயன்பட்டு வந்திருக்கிறார். முதன்முறையாக அவரது கட்டுரைகள் இப்போதுதான் தமிழில் நூலாக வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் வெளியான நாகராஜின் கட்டுரைத் தொகுப்புகளில் இடம்பெற்ற அரசியல் சார்ந்த கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த சொற்களைத் தமிழ்ப்படுத்துவதில் உள்ள சவால்களை ராமாநுஜம் வெற்றிகரமாகவே எதிர்கொண்டிருக்கிறார். இந்நூலின் முதல்பகுதியில் உள்ள கட்டுரைகள் காந்தி, அம்பேத்கர் இருவருக்கும் இடையே இணக்கத்திற்கான அவசியத்தையும் அதற்கான சாத்தியங்களையும் பேசுகின்றன. பொறுமையிழந்து முட்டி மோதிக்கொண்ட அவர்கள் இருவரும் செயல்பாட்டில் குதித்தவுடன் ஒருவர் மற்றொருவரின் குறையைப் போக்கிக்கொண்டார்கள் என்பதாக நாகராஜின் ஆய்வு அமைகிறது. இருமை-எதிர்ப்பு என்ற முரண் அரசியல் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகுவதை நாகராஜ் தவிர்த்திருக்கிறார். இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகள் தலித் அரசியலையும் கலாச்சாரத்தையும் பற்றியவை. தலித் இயக்கத்தின் சக பயணி என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர் நாகராஜ். அவரது பார்வையின்படி, ஒடுக்கப்பட்டவர்கள் இரக்கத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் செழிப்பான கலாச்சாரத்தையும் கொண்டிருப்பவர்கள். வாழ்வியல் துயரத்தை எதிர்கொண்டவர்கள் தலித்துகள் மட்டுமின்றி, நவீனத் தொழில்நுட்பத்திற்குப் பலிகொடுக்கப்பட்ட இந்தியக் கைவினைஞர்களும்தான். பழங்குடிகள் பின்தங்கியவர்களோ, நாகரிகமற்றவர்களோ அல்ல. அவர்கள் நாகரிகத் தளத்திலான சிறுபான்மையினராகவே கருதப்பட வேண்டும். மூன்றாம் பகுதியில் இந்தியாவின் பன்முகத்தன்மை, உலகமயமாதலுக்கு எதிரான நிலைப்பாடுகள். சிறுபான்மையினர், ஆன்மிகமும் சமூகச் செயல்பாடுகளும் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இடம்பெற்றுள்ள அஷிஸ் நந்தியைப் பற்றிய கட்டுரை முக்கியமானது. அஷிஸ் நந்தியைத் தெற்காசியப் பின்னணியில் இருந்து நவீனத்துவத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கியவர் என்று நிறுவும் நாகராஜ், கூடவே அறிவுஜீவித் தெருச்சண்டைக்காரர் என்ற அவரது அறிவிக்கப்படாத வரையறையொன்றையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். நந்தியின் கட்டுரைகளில் அமைந்துள்ள நாடகப் பாங்கான கூறுகளையும் விவரிக்கிறார். கட்டுரை என்பதும் இலக்கிய வடிவங்களில் ஒன்று என்பதையும் வெவ்வேறு அறிவுத்துறைகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களால் ஆய்வுகளில் மேலும் பல புதிய வெளிச்சங்கள் கிடைக்கும் என்பதையும் இக்கட்டுரைகள் நிரூபிக்கின்றன. இத்தொகுப்பு, தமிழ் அறிவுலகிற்குக் குறிப்பிடத்தக்க நல்வரவு. – செல்வ புவியரசன். நன்றி: தி இந்து, 18/6/2014.