துக்காராம்
துக்காராம், பால சந்திரா நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே. நாகு, சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ.
மகாராஷ்டிரா மாநிலத்தில், பக்தி நெறியை பரப்பியவர்களில் மிக முக்கியமானவர் துக்காராம். 13ம் நூற்றாண்டில் தோன்றிய வரகரி இயக்கத்தின் மிக முக்கியமான அங்கமாக திகழ்ந்தவர். ஜாதிப் பாகுபாடுகளை ஏற்காமல், எல்லாரும் சமம் என்ற கோட்பாட்டை கொண்டது இந்த இயக்கம். அப்போது மித மிஞ்சிய ஆணவப் போக்கோடு இருந்த பிராமணீயத்தை சரிக்கட்டும் மாற்றுச் சக்தியாய் இயங்கிய வரகரி இயக்கத்தை லட்சக்கணக்கான மக்களிடையே பரப்பியவர் துக்காராம். அவர் ஒரு அருட்கவி. அவரது வாழ்க்கை வரலாறு, தங்கு தடையற்ற அருமையான தமிழ் மொழி பெயர்ப்பில் வெளியிடப்பட்டுள்ளது. -மயிலை சிவா.
—-
இரமணரின் கீதாசாரம், எஸ். ராமன், இந்துத்துவப் பதிப்பகம், 46, அனுமந்தபுரம், வி.என். பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005, பக். 100, விலை 70ரூ.
கீதையைப் பற்றி பகவான் ரமணரின் விளக்கங்கள், இந்த நூலின் சிறப்பு என்னவென்றால், சமஸ்கிருத ஸ்லோகம், அதற்கான வெண்பா, பின் அதற்கான விளக்கம் என, படிக்கும் அன்பர்கள் இரமண ரசகத்தை எளிதில் புரிந்து கொள்ளும்படி எழுதி இருப்பதுதான். ரமணரின் ஞான நெறி விளக்கங்களையும், இங்கு வரும் கீதையின் கருத்துக்களையும் ஒப்பு நோக்கினால் கீதையின் போதனைகளை, நம் முன் வாழ்ந்து காட்டிய விதேக முக்தரான ரமணர் மூலம் கீதாசாரியனின் அருள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதை உணரலாம். -எஸ். குரு.
—-
நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை, பிரபோதரன் சுகுமார், ஹயக்ரீவா பப்ளிகேஷன்ஸ்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சமாதி நெரூரில் (கரூர் அருகில்) உள்ளது. ஒரு புண்ணிய க்ஷேத்திரத்திற்கு இணையாக, அன்பர்களால் போற்றிப் புகழப்படும் பகுதி இது. இவர் தனத ஆன்மிக ஸாதனாவில் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக அன்பர்களால் பேசப்படுவதுண்டு. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆதரவு பெற்ற இவர், சில சமஸ்கிருத நூல்கள் எழுதியுள்ளார். மூன்று இடங்களில் இவர் ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும் அன்பர்களால் சொல்லப்படுகிறது. இவரைப் பற்றிய ஒரு முழுமையான தகவல்கள் அடங்கிய நூலாக பிரபோதரன் சுகுமார் இதை எழுதியுள்ளார். நிறைய வண்ணப் படங்கள். பல சுவையான ஆன்மிக தகவல்கள் உள்ளன. -ஜனகன். நன்றி: தினமலர், 6/10/2013.