தெருக்கூத்து கலைஞர்கள்
தெருக்கூத்து கலைஞர்கள், கோ. பழனி, சி. முத்துகந்தன், போதிவனம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-2.html
தமிழ் மண்ணில் கூத்து, நாடகம், கதை சொல்லல், ஆட்டங்கள், இசை தொகுப்புகள் என, பல்வேறு நிகழ்த்து கலைகள் உள்ளன. கேரளத்து கதகளி, கர்நாடகத்து யட்சகானம், ஆந்திரத்து வீதிநாடகா ஆகியன போன்று தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு முழுமையான அரங்காக தெருக்கூத்து விளங்குகிறது. இந்த கலைகள் அந்தந்த மாநிலத்தவர்களால், அங்கீகரிக்கப்பட்டது போல தெருக்கூத்து தமிழர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த நூலில் தெருக்கூத்து கலைஞர்கள் 106 நபர்களின் நேர்காணல்களுடன் அவர்களை பற்றிய விவரங்களும் உள்ளன. தெருக்கூத்து குறித்து நுணுக்கமான தகவல்களையும், கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை பதிவுகளையும், சுவாரசியமாக பதிவு செய்ததில், இந்த நூல் நம் கவனத்தை கவர்கிறது. மொத்தம் 424 பக்கங்களுடன் நூல் வெளிவந்திருக்கிறது. இதை கன்னிமாரா நூலகத்தில் படித்து பயன் பெறலாம். நன்றி: தினமலர், 21/7/13.
—-
அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி- ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள், மிகெய்ல் நைமி, தமிழில் கவிஞர் புவியரசு, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், பக். 184, விலை 100ரூ.
லெபனான் நாட்டு அறிஞரான மிகெய்ல் நைமி ஒருநாள் ஒரு காப்பிக் கடைக்கள் மழைக்காக ஒதுங்கியபோது அந்தக் கடையின் உரிமையாளர் அங்கு பணியிலிருந்து காணாமல் போய்விட்ட ஒரு அம்மை வடுமுகத்து இளைஞனைப் பற்றி நைமியியிடம் புலம்பியதோடு அந்த இளைஞன் எழுதிவைத்த நினைவுக் குறிப்புகளையும் அவரிடம் தருகிறார். அந்த நினைவுக் குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். அந்த இளைஞன் பெயரற்றவன், ஊரற்றவன், பெற்றோரைப் பற்றி அறியாதவன், ஆயினும் அவற்றைப் பற்றி கவலைப்படாதவன். ஒற்றைப் பெயர் கொண்டு என்னை அழைப்பது எனக்கு சம்மதமில்லை. ஒவ்வொரு கணமும் நானொரு புதிய மனிதன் என்றும் ஒருவேளை எனக்கொரு நாடு இருந்தாலும் கூட அதை நான் துறந்துவிடுவேன். பிரபஞ்சமே எனது வீடு என்றும் கூறுகிறான். பெரிய தத்துவங்களைக்கூட எளிய மொழியில் எழுதியிருக்கிறான். தனக்குத் தெரியாததை மறுப்பது மனித இயல்பு, வாழ்க்கை மாளிகையைக் கட்ட பணம், அடித்தளமாக அமையாது, போரை வாழ்க்கைப் போராட்டம் என்பதைவிட மரணப் போராட்டம் என்பதே சரி. ஒரு முட்டாளின் கடவுள் அவனது முட்டாள்தனம்தான், தற்காலிகம் நிரந்தரமானது. நிரந்தரம் ஒரு மாயை போன்றவை நினைவுக் குறிப்புகளின் பல இடங்களில் காணப்படும் ஒருவரி தத்துவங்கள். கடல் பற்றிய சிந்தனையும் உழைப்பாளர் தினத்தன்று எழுதப்பட்ட குறிப்புகளும் தன் ஆத்மாவோடு நடத்தப்பட்ட உரையாடலும் மிகவும் சிறப்பானவை. அந்நியத் தன்மையற்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு பலம் சேர்க்கிறது. நன்றி; தினத்தந்தி, 22/7/13.
