தேவதைகளின் வீடு
தேவதைகளின் வீடு, எம்.ஸ்டாலின் சரவணன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 88, விலை 60ரூ.
கவிஞருக்கு நிகழ்ந்த அனுபவங்களே இக்கவிதை ஊர்வலம் என்பதை கவிதைகளின் வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. அவருக்குள் எழும் கோபதாபங்களையும் மகிழ்ச்சிகளையும் சமூக அக்கறைகளையும் இறங்கி வைக்கும் சுமைதாங்கியாக இக்கவிதைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். “ஆறு கொலை தடயம் சிக்கியது மணல் லாரி தடம்” போன்ற கவிதைகள் அந்த ரகமே. தன் வாழ்வில், தன் நண்பர்களின் வாழ்ந்த நடந்த நிகழ்வுகளை சமுதாயம் உணரும் விதத்தில் அதன் போக்கிலேயே சென்று உண்மையாகப் பேசுவதால் இக்கவிதைகள் மனதில் நிற்கின்றன. காதல், மழை, தாய்மை என்று கவிதைகளில் ஈரம் அதிகம். ஆயிரம் மரங்கள் காத்துக்கிடந்தும் ஒரு புத்தன் கூட வந்து அமரவில்லை என்ற கவிஞரின் காத்திருப்பு நமக்கு எழுகிறது. நன்றி: குமுதம், 30/3/2015.
—-
சென்னை ஆலயங்கள், மு.ரா. சுந்தரமூர்த்தி, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 128, விலை 95ரூ.
ஒரு கோயிலுக்குப் போகும் முன், அக்கோயிலின் மகிமை, மகத்துவம், புராண வரலாறு உள்ளிட்டவற்றை அறிந்துகொண்டு போவது, இறைவன் மீது நமக்கிருக்கும் ஈடுபாடு இன்னும் அதிகரிக்கும் என்பதே நூலாசிரியரின் எண்ணம். அந்த வகையில் சென்னையில் உள்ள பெரும்பாலான ஆலயங்களை அதன் தலவரலாறுடன் பதிவு செய்யப்பட்ட நூல் இது. காமதேனு வழங்கிய காரணீஸ்வரர் கோயில் தொடங்கி, பாவங்களைப் போக்கும் பார்த்தசாரதி கோயில் வரை 26 கோயில்கள் பற்றிய செய்திகள் சுவாரஸ்யமாக தொகுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. கோயிலின் தொன்மை, புராண இதிகாச தொடர்புகள், கோயில் இடம் பெற்றுள்ள ஸ்தலம் என்று அது தரும் ஆன்மிகச் செய்தி சிறப்பு. சென்னை கோயில்களை தரிசிக்க விரும்புவோர்க்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும் என்பது உறுதி. நன்றி: குமுதம், 30/3/2015.