தேவாரத்தில் தொன்மம்
தேவாரத்தில் தொன்மம், முனைவர் வே. சேதுராமன், சேது பதிப்பகம், சிந்தாமணி இல்லம், 27, விஸ்வநாதன் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை ரூ1350 (நான்கு பாகங்கள்).
கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரான இந்நூலாசிரியர், சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். இவர் தேவாரத்தில் காணப்படும் தொன்மம் குறித்து, பல ஆண்டுகள் திறனாய்வு செய்து, நான்கு பாகங்களாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு பாகமும் சுமார் 400 பக்கங்களுக்கு மேலுள்ள தனித்தனி நூல்களாகும். இந்நூலின் ஆரம்பத்திலேயே தொன்மத்திற்கும், புராணத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறும் ஆசிரியர், தொன்மத்தின் பெருமை, சிறப்பு, பயன், இலக்கியத்திற்கும் தொன்மத்திற்கும் உள்ள ஒற்றுமை போன்றவை குறித்தும் ஆய்வு முறையில் விளக்கியுள்ளார். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஆகியோர் இயற்றிய தேவாரம். மற்ற சிவனடியார்கள் இயற்றிய திருமுறைகள் என்று அனைத்தையும் ஆராய்ந்து அவற்றில் வரும் சிவன், உமையாள், வினாயகர், முருகன், திருமால், பிரமன், சிவகணங்கள், பூதகணங்கள், இந்திரன், மறைகள், மனிதர்கள், மொழிகள், சொர்க்கம், நரகம், புவனம், உயிர்த்தோற்றம், ஒடுக்கம், தவம், மூர்த்தி, தீர்த்தம், விழாக்கள்… என்று அனைத்தையும் பற்றிய தொன்மங்களை உரிய பாடல் வரிகளுடனும், நம் நாட்டில் காணப்படும் தொன்மம் குறித்த புகைப்படச் சான்றுகளுடனும் விளக்கியுள்ளார். தவிர, சிவனடியார்களின் பெருமைகளை, கொள்கைகளை, பண்டிகைகளை, இறை வழிபாட்டு முறைகளையும் எடுத்து கூறுகிறார். இறுதியாக இவரது ஆய்வு முடிவுகளாக சில தகவல்களையும் கூறுகிறார். இவையும் இந்நூலில் இடம் பெற்றிருப்பது சிறப்பானது. நன்றி: துக்ளக், 4/12/13.
—-
முதுவர் இன பழங்குடிகள், முனைவர் சு. இராஜேந்திரன், சேகர் பதிப்பகம்.
பழங்குடிகளின் பழக்க வழக்கங்கள், மொழி, வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் இன்றைய அவசர உலகில் அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதுதான் அரிது. அந்த வகையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட காட்டு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற முதுவர் இன பழங்குடிகள் பற்றி இந்த நூலில் அறிய முடிகிறது. அவர்களின் நம்பிக்கை, சடங்குகள், திருமண முறைகள், பண்டிகை விழாக்கள், மக்கள் தொகை, வாழிடங்கள், மற்றும் உறவின் பாசத்தையும், கடவுளின் பக்தியையும் கலந்த தாலாட்டு, இசைக்கருவிகள் ஆகியவை குறித்து சுவாரசியமான தகவல்கள் உள்ளன. குறிப்பாக தேவிகுளம் தாலுகாவில் அதிகமாக வாழ்கின்ற முதுவான் பழங்குடியினரை பற்றி பல்வேறு செய்திகள் இந்த நூலில் பதிவாகி உள்ளன. இதுபோன்ற சுவையான தகவல்களுடன், 336 பக்கங்களில் வெளியாகி உள்ள இந்த புத்தகம், செங்குன்றம் முழு நேர நூலகத்தில், கிடைக்கிறது. படித்து பயன்பெறலாம். நன்றி: தினமலர், 1/9/2013.