நாடறிந்தோர் வாழ்வில்
நாடறிந்தோர் வாழ்வில், சீதைப் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.
தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைக் கூறும் நூல். இதற்கு முன் இதுபோன்ற நூல்கள் வந்திருக்கின்றன. அவை உரைநடையில் எழுதப்பட்டவை. கவிவேந்தர் கா. வேழவேந்தன் இந்த நூலை மரபுக் கவிதை வடிவில் எழுதியுள்ளார். எல்லோரும் எளிதில் புரிந்துகொண்டு ரசிக்கும்படியாகவும், அதே சமயத்தில் இலக்கியச் சிறப்புடனும் கவிதைகளை எழுதியிருப்பது கவிஞரின் ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றன. மகாத்மா காந்தி, நேரு, சாக்ரடீஸ், பெரியார், அண்ணா, பாரதியார், கலைஞர் கருணாநிதி, பாரதிதாசன், கண்ணதாசன் உள்பட 50 தலைவர்கள், சாதனையாளர்கள் பற்றி அறிந்து கொள்ள அருமையான நூல். நன்றி: தினத்தந்தி, 21/5/2014.
—-
குடந்தை கதிர், தமிழ்வாணனாரின் வாழ்வும் நெறிகளும், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர் 613204, விலை 200ரூ.
சொல், செயல், சிந்தனை போன்ற பல்வேறு நிலைகளில் தமிழ்மொழியை உயிர்மூச்சாகக் கருதி அன்னைத் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு மறைந்த குடந்தை கதிர். தமிழ்வாணனாரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் நடைமுறைப்படுத்திய தமிழ் நெறிகளையும், பலர் தெரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட 29 கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.