நான் வித்யா

வலிகளின் பதிவுகள் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களுடைய வாழ்க்கை பற்றி மேலை நாடுகளில் ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழில் திருநங்கைகள் பற்றிய நூல்கள் அதிகம் இல்லை. இருப்பினும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் எழுதியுள்ள இம்மூன்று நூல்களும் திருநங்கைகளை புரிந்து கொள்ள உதவுகின்றன என்பதில் ஐயமில்லை.  

நான் வித்யா, லிவிங்ஸ்மைல் வித்யா, கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ்ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018, பக்கங்கள் 216, விலை 100ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-578-8.html

வித்யா என்ற சுயசரிதையை லிவிங்ஸ்மைல் வித்யா எழுதியுள்ளார். இந்நூலின் அட்டையிலேயே கண்ணீர் விடாதீர்கள் துடைக்க முடியுமா என பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். முதல் அத்தியாயம் நிர்வாணம் அரவாணிகள் செய்து கொள்ளும் அறுவைசிகிச்சை பற்றியதாகும். அறுவை சிகிச்சையை அவர் விவரிக்கையில் இப்படி கஷ்டப்பட்டாவது தன்னை பெண்ணாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி படிப்பவர்கள் மனதில் தோன்றாமல் இருக்காது. ஆணுறுப்பை வெட்டி எடுக்கும்போது… ஆம் அந்த நொடியில் நான் கண்டதன் பெயர்தான் மரணம் என்று குறிப்பிட்டுள்ளார். வித்யாவின் இளமைப்பருவம் கஷ்டங்கள் நிறைந்ததாக இருந்தது. அவர் மிகவும் நன்றாக படித்ததால் அவரைப் பற்றி அவரது அப்பாவுக்கு நிறைய கனவுகள் இருந்தன.சகோதரி ராதாவுடனான நெருக்கம், சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம், சாதிக்க வேண்டும் என்ற வெறி வித்தியாவை சற்று வித்தியாசமான அரவாணியாகக் காட்டுகிறது. பெண்ணாக உணர்ந்தாலும் மனதிட்பத்துடன் மற்ற மாணவர்களின் பார்வைகளை எதிர்கொண்டு முதுகலை பட்டம் பெற்றது பெரிய சாதனைதான். வித்யா சென்னை சென்ற பின்னர் பல அரவாணிகளுடனான தொடர்பு அவருடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. என்ன ஆனாலும் சரி, பாலியல் தொழிலில் மட்டும் ஈடுபடக்கூடாது என்ற அவரது மன உறுதி அவர் எப்படிப்பட்ட போராட்டத்தையும் சந்திக்கத் தயாராக உள்ளார் என்பதையே தெளிவுப்படுத்துகிறது. அறுவை சிகிச்சை செய்து கொள்ள தீவிரமாக ஆர்வம் காட்டும் வித்யா அதற்காக பிச்சை எடுக்கக்கூட தயாராக இருக்கிறார். ரெயினில், கடைகளில் கைகளைத் தட்டி பிச்சைகேட்பது படித்து பட்டம் பெற்ற ஒருவருக்கு எவ்வளவு துயரத்தை அளித்திருக்கும். வித்யாவுக்கு எவ்வளவு பேர் அரவாணியாக மாறவேண்டாம் என அறிவுரை கூறினர்? வித்யா கூறுகிறார் யாருடைய அறிவுரையும் எடுபடவில்லை. இந்த ஆண் உடலை வதம் செய்யும் வெறியுடன் ருத்ர தாண்டவமாடியது எனது பெண்மை புரிந்து கொள்வது கடினமாகத்தான் இருக்கிறது. அரவாணிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் பற்றிய வித்தியாவின் கணிப்பும் வித்தியாசமாக உள்ளது. தொண்டு நிறுவனங்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறதே தவிர அரவாணிகளுக்கு பொருளாதார சுதந்திரத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார். பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே வித்யாவுக்கு நல்ல நண்பர்கள், வழிகாட்டிகள் கிடைத்தனர் என்பது நல்ல அம்சம் (மு. ராமசாமி, முருகபூபதி, அமுதன், பாலபாரதி). அலுவலக வேலை என கோவை, மதுரையில் வசித்து நிறைய அனுபவம் பெற்றுள்ளார். சென்னையில் அரவாணிகளுக்காக குரல் கொடுக்கும்வித்யாவின் இந்த நூல் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெண்ணிய சிந்தனைகளை வலுவாக முன்வைக்கும் வித்யா அரசு அரவாணிகளை எப்படிப் பார்க்க வேண்டும். இச்சமூகமும் குடும்பமும் எப்படி அவர்களை அணுக வேண்டும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். கல்வி, பொருளாதார சுதந்திரம், சமூகம், சட்ட அங்கீகாரம், அரசியல் பங்கேற்பு ஆகியவை சாத்தியாமானல், சிறுபான்மையிலும் சிறுபான்மையாக உள்ள அரவாணிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படும். ஒன்பது, அலி, அரவாணி, திருநங்கை என அவர்களை அழைப்பதில் மாற்றம் வந்துள்ளது. குடிமக்களாக அரசு அனைத்து உரிமைகளையும் வழங்கும் பொழுது குடும்பமும் அவர்களை ஏற்றுக் கொள்ளும். பள்ளிப் பாடங்களிலேயே திருநங்கைகளை அறிமுகப்படுத்தலாமென்ற ஆலோசனையை வித்யா முன்வைத்துள்ளார். ஊடகங்களும் இவர்களைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்துவது அவசியம். சொர்க்கம் வேண்டுமென்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமென்றுதான் மன்றாடுகிறேன் எனக்காகவும் என்னைப் போன்ற திருநங்கைகளுக்காகவும் என்ற வித்தியாவின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து திருநங்கைகளை புரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். – பேரா. ஆர். சந்திரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *