நீங்களும் சிகரம் தொடலாம்

நீங்களும் சிகரம் தொடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், 9, ஜி. ஏ. ரோடு, சென்னை 21, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-9.html

அனைத்து மனிதனும் தலைசிறந்த மனிதனாக உருவாக வேண்டும். அதற்கு தன்னம்பிக்கையே ஆதாரம் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில், உழைப்பு, வாய்ப்பு, நிர்வாகத்திறன், மனித நேயம் உட்பட 35 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வீழ்வதில் தவறில்லை. வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. மண்ணில் விழுந்த விதை தண்ணீர் கிடைத்ததும் முளைப்பதுபோல, உங்கள் முயற்சியிம் உரிய சந்தர்ப்பம் வரும்போது வெற்றியாக மலரும் என்ற வைர வரியையும் நூலாசிரியர் அழகாக பதிவு செய்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதுடன், நூலை நம்பிக்கையுடன் படித்து, பின்பற்றுவதன் மூலம் நீங்களும் சிகரம் தொடலாம். நன்றி: தினத்தந்தி, 26/2/2014.  

—-

 

பெரிய புராணத்தில் மகளிர், க. துரியானந்தம், திருவரசு புத்தக நிலையம், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-3.html

பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் உள்ளிட்ட ஏழு மகளிரின் மாண்புகளையும், பெருமைகளையும் சேக்கிழார் பெருமானின் பாடல்களின் துணை கொண்டு அழகாகவும் சிறப்பாகவும் விளக்கியுள்ளார் நூலாசிரியர். வெறும் பாடல்கள், விளக்கங்கள் என்றில்லாமல் ஒவ்வொரு பாடலையும் சேக்கிழார் எவ்வளவு நுட்பமாகவும், பொருள் செறிவுடனும் பாடியிருக்கிறார் என்பதைப் பொருத்தமான மேற்கோள்களுடன் ஆசிரியர் விளக்கியிருப்பது அருமை. குறிப்பாக, காரைக்கால் அம்மையார் வரலாற்றில் புனிதவதியாரின் பேரழகைச் சேக்கிழார் வர்ணிப்பதற்குக் காரணம், பிற்காலத்தில் அந்த அழகு பொங்கும் இளமை வேண்டாம் என்று இறைவனிடம் முறையிட்டு, கண்டோர் அஞ்சி ஒதுங்கும் அழகில்லாத பேய்க் கோலத்தைப் பெறப் போகிறார் என்பதால்தான் என்று ஆசிரியர் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது. மேற்கோள் பாடல்கள் தேர்வும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. திலவதியார் வரலாற்றில் சிறுவாமூர் பற்றிய பாடலும், சங்கிலியார் வரலாற்றில் நம்பியாரூரர் திருவாலங்காட்டில் வந்து பாடிய பதிகமும் அவ்வகைக்கு உதாரணங்கள். நூல் முழுவதும் தகவல்கள் நிரம்பி இருந்தாலும், சுவை குன்றாது, ஆர்வமுடன் படிக்க முடிகிறது. இந்நூலைப் படித்தவர்கள் பெரிய புராணத்தைத் தேடிப் படிப்பார்கள் என்பது உறுதி. நன்றி: தினமணி, 12/8/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *