நேர் நேர் தேமா
நேர் நேர் தேமா, கோபிநாத், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29 (7/3)ஈ1 பிளாக், முதல் தளம், மேட்லிசாலை, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 192, விலை 100ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-203-9.html
அகந்தை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் ரொம்ப காலம் நம்மை வறுமையில வச்சிருந்தாருன்னுதான் நான் எடுத்துக்கறேன் என்ற சாலமன் பாப்பையா தொடங்கி பத்மா சுப்ரமணியம், எம்.என். நம்பியார், கே. பாலச்சந்தர், வைரமுத்து, சிவக்குமார், எம்.எஸ். விஸ்வநாதன், நான் தமிழன் என்பதன் அடையாளம்தான் இந்த வேட்டி சட்டை. இதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அதைப் பெருமையாக நினைக்கிறேன் என்ற ப. சிதம்பரம், என்னுடைய பொது வாழ்க்கைப் பயணத்தில் நான் பாலத்திலே நடக்கிறபோது, இரண்டு புறமும் இருக்கிற இரண்டு கைப்பிடிகளைப்போல ஒரு பக்கத்திலே இலக்கியம், இன்னொரு பக்கத்திலே அரசியல் இருக்கிறது என்ற கலைஞர் கருணாநிதி ஈறாக 21 சாதனையாளர்களின் நேர்காணல்கள் கட்டுரை வடிவில் தந்துள்ளார் நூலாசிரியர். தன்னை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு, இந்த புத்தகம் சில முன்னுதாரணங்களைச் சொல்லக்கூடும் என்னும் கோபிநாத்தின் நம்பிக்கை வீண்போகாது.
____
பதிற்றுப்பத்து மூலமும் ஆராச்சிப் புத்துரையும், முனைவர் கரு.அழ. குணசேகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை 113, பக்கங்கள் 44+332, விலை 170ரூ.
1904ல் உ.வே.சா.. தொடங்கி 2009ல் ச.வே.சு முடிய பலர் பதிற்றுப்பத்து மூலம், உரையும் எழுதியுள்ளனர். ஒத்த பதிற்றுப்பத்து எனச் சிறப்பிக்கப்படும் எட்டுத் தொகை நூல் கலையியல் மற்றும் சமூகஇயல் நோக்கில் நூலாசிரியரால் புத்துரை எழுதப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு காலத்தில் வாழும் மக்களிடையே அறிவுப்பசி தலையெடுக்கின்ற காலத்து, தங்கள் பழம் பெரும் நூல்களுக்கு தங்கள் காலத்து வாழ்க்கைச் சூழலுக்கேற்ப விளக்கம் தர முயல்வர். பழமையில் புதுமை காண வேண்டும் என்னும் நோக்கமும், உரை எழுதுகின்ற போக்கும் இயல்பானதே என்னும் கருத்துக்கு ஏற்ப சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துக்குத் தற்கால சமூகச்சூழலையொட்டி உரை எழுதியுள்ள நூலாசிரியரின் கற்பனைத் திறன் பாராட்டத்தக்கதாகம். தமிழ்த் திறனாய்விற்கு புதியவரவிது. -பின்னலூரான்.
——
பக்கம் ஒரு படிப்பினை, மு. அப்பாஸ்மந்திரி, கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை 16, பக்கங்கள் 160, விலை 80ரூ.
பக்கத்திற்கு ஒரு படிப்பினை என்று நூற்றி அறுபது பக்கங்களில் 132 படிப்பினைகளை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்பதுபோல் பொது வாழ்வில் சிறந்து விளங்கி புகழ்பெற்ற மனிதர்களது வாழ்வியல் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடம்தான். அந்த வகையில் இதில் ஒவ்வொன்றிலும் இருக்கும் படிப்பினை கவனத்தை ஈர்க்கின்றன. –ஸ்ரீநிவாஸ். நன்றி: தினமலர், 12 பிப்ரவரி 2012.