பள்ளிக் குழந்தைகளுக்கான சிற்றுண்டி வகைகள் சுவைக்க ருசிக்க 150 வகைகள்
பள்ளிக் குழந்தைகளுக்கான சிற்றுண்டி வகைகள் சுவைக்க ருசிக்க 150 வகைகள், ஆதிரை வேணுகோபால், உஷா பிரசுரம், 2/3, 4வது தெரு, கோபாலபுரம், சென்னை 86, விலை 80ரூ.
பெரும்பாலான இல்லத்தரசிகளின் தினசரி கவலை இன்று என்ன சமைப்பது என்பதுதான். அதுவும் பள்ளிக் குழந்தைகள் இருக்கிற வீட்டில் அந்தக் கவலை இருமடங்காகிவிடும். என்னதான் பார்த்துப் பார்த்துச் சமைத்தாலும உணவை அப்படியே திரும்பக் கொண்டுவந்துவிடுகிற குழந்தைகளைப் பற்றிப் புகார் சொல்லாத அம்மாக்கள் குறைவு. அவர்களின் குறைகளுக்குத் தீர்வாக அமைந்துவிடுகிறது ஆதிரை வேணுகோபாலின் புத்தகம். பொதுவாக சமையல் புத்தகங்களில் காணப்டும் உணவு வகைகளில் சுவைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்திருப்பார்கள். குழந்தைகளுக்கான உணவு என்பதால் சுவையோடு ஆரோக்கியத்தையும் சேர்த்தே அமுது படைத்திருக்கிறார். பெரும்பாலான உணவு வகைககளை காபி கலந்தபடியே செய்துமுடித்துவிடலாம். எளிமையாகவும் புதுமையாகவும் இருக்கின்றன. அதை வறுத்து, இதைப் பொடித்து என முழுநீள செய்முறை இல்லாதது நிம்மதி தருகிறது. குறைந்த நேரத்தில் நிறைவான உணவுகளைச் செய்ய முடிவது இன்னொரு சிறப்பு. மனைவி ஊருக்குப் போய்விட்டால் கணவன் கவலைப்படத் தேவையே இல்லை. அவர்களே குழந்தைகளுக்கு உணவு சமைத்து, பள்ளிக்கு அனுப்பலாம். சுவை, ஆரோக்கியம், புதுமை என அனைத்தும் நிறைந்த உணவுகளை நிச்சயம் குழந்தைகள் ருசிப்பார்கள். தினம் ஒன்று என்று கணக்கு வைத்துக்கொண்டாலும் வருடம் முழுக்க குழந்தைகளுக்குப் புதுப்புது உணவுகளைத் தரலாம். -ப்ரதிமா. நன்றி: தி இந்து, 8/12/13.
—-
சத்துணவும் சமுதாய விழிப்புணர்வும், பெரு. தியாகராசன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 100ரூ.
சத்துணவை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஊட்டச்சத்துக்கள், கீரைகள், காய்கறிகள், பழங்களின் பயன்கள் குறித்து நூலில் விவரித்துள்ள ஆசிரியர் அவை ஒவ்வொன்றின் மருத்துவ குணங்கள் குறித்தும் விளக்கியுள்ளார். இறுதியில் பயனுள்ள சில குறிப்புகள் என்ற தலைப்பில் நோய்களை தடுக்கும் உணவு வகைகள் குறித்து விளக்கியுள்ளது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 18/12/13.