பாரதிதாசன் கவிதைகள் பற்றி ஆய்வு நூல்
பாரதிதாசன் கவிதைகள் பற்றி ஆய்வு நூல், ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
பெண் விடுதலை, தமிழ் மொழி வளர்ச்சி, சுயமரியாதை, பொதுவுடைமை, கைம்பெண் கொடுமை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை எழுதி புரட்சிக் கவிஞர் எனப் புகழ் பெற்றவர் பாரதிதாசன். அவர் எழுதிய முதல் கவிதை தொடங்கி இறுதிக்கவிதை வரை அத்தனைக் கவிதைகளையும் எழுத்தாளர் கே. ஜீவபாரதி ஆய்வு செய்துள்ளார். இந்தக் கவிதைகள் படைக்கப்பட்ட சூழல், அந்த காலகட்டத்தில் நிலவிய அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை கோடிட்டு காட்டியிருப்பது நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. பாரதிதாசன் பற்றி எத்தனையோ ஆய்வு நூல்கள் வந்திருந்தபோதிலும், அவற்றில் இருந்து வேறுபட்டு இந்நூல் தனிச்சிறப்புடன் தனித்து நிற்கிறது. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.
—-
ஒரு தலித்திடமிருந்து, வசந்த் மூன், தமிழில் வெ. கோவிந்தசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 220ரூ.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மகர்கள் எனும் தலித்துகளின் வாழ்க்கை வரலாறு குறித்த பதிவுகள் அடங்கிய இந்த நூலில், அம்மக்களின் இருப்பு, இயலாமை, புறக்கணிப்புகள், போராட்டக்களம் அம்பேத்கர் வழி வலுப்பெற்றதையும் காட்சிகளாக விவரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக மற்றும் அரசியல் இயக்கமும், எதிர்கொண்ட சவால்களும் நுட்பமாகப் பதிவாகியுள்ளன. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.