பாரதியின் பேரறிவு
பாரதியின் பேரறிவு, இரா. இராமமூர்த்தி, வசந்த ஸ்ரீ பதிப்பகம், 28, சி. கல்யாண் அடுக்ககம், ரயில் நிலையச் சாலை, ஆலந்தூர், சென்னை 16, பக்கங்கள் 160, விலை 80ரூ.
அமரகவி பாரதியின் எழுத்துக்களும் பாரதி நினைவுகளும் நிரந்தரமானவை. தமிழ் மொழி உள்ளவரை தமிழ் நெஞ்சம் மறக்கவே இயலாதவைகளும் பாரதி ஞாபகங்களுக்கும் இடமுண்டு. மொழிப்பற்றும், தமிழின உணர்வும் உள்ள பாரதி இலக்கியச் செல்வர் இந்நூலின் வாயிலாக பாரதியின் பன்முகத் திறமையின் வெளிபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். பாரதி எல்லா மொழிகளையும் நேசித்த தமிழ்க்கவிஞர். பாரதி எல்லா உயிர்களையும் நேசித்த மனிதாபிமானி, பாரதி இயற்கையை உபாசித்த வேதஞானி. தேசப்பற்றுக்கு பாரதியை மட்டுமே நல்ல உதாரணமாக சொல்லலாம். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பாரதியை இந்நூலில் நமக்கு அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர். ஏற்கெனவே தெரிந்த பல விஷயங்களுடன் தெரியாத பல விஷயங்களையும் நமக்கு வழங்கியிருக்கிறார். பாரதி அறிஞர், பாரதி அன்பர்களுக்கு நல் விருந்தாக அமைந்துள்ள புத்தகம் இது. -ஜனகன்.
—–
பாரதி தாசனும் கிளாடு மெக்கேயும், வான்முகில், மோ. வெற்றியரசி, 26, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, பக்கங்கள் 224+2251, விலை 100+120ரூ
ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க நூலகத்தில் 2004ம் ஆண்டு மெலஸ் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில், ஆங்கிலத்தில் வாசித்தளிக்கப்பட்ட கருத்தரங்க கட்டுரையின் விரிவாகத்தை இரண்டு தொகுதிகளில் தமிழில் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழில் ஒப்பிலக்கியம் அதிகம் மலராத நிலையில் இந்நூல் தமிழுக்கு புது வரலாய் வந்திருக்கிறது. ஒப்பிலக்கிய கோட்பாடுகளை வாசகர்கள் புரிந்து கொள்கின்ற வகையில் இருப்பது இந்நூலின் சிறப்புகளுள் ஒன்றாகும். தமிழ் மறுமலர்ச்சியும், கலையாகும் கருத்துபரல், மனிதனே அளவுகோல், பாவேந்தரின் அழகின் சிரிப்பு, பண்பாட்டு திறனாய்வு, கவிதை உத்திகள் என எட்டு இயல்களில் இரண்டு கவிஞர்களின் படைப்புகளோடு ஒப்பிட்டு பதிவு செய்துள்ள அத்தனை செய்திகளும் மிக மிக அருமை. அனைவரும் வாங்கி மறு வாசிப்பிற்கும் உட்படுத்தப்படும் ஒப்பீட்டு இலக்கியம் இந்நூல். -குமரய்யா. நன்றி: தினமலர், 26 பிப்ரவரி 2012.