பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் 2ஆம் பாகம்
பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் 2ஆம் பாகம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ.
பாரதியாரைப் பற்றிப் படிக்கப் படிக்க புதுப்புது கருத்துகள் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்த நூலிலும் அதனை உணர முடிகிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் நூலாசிரியரால் கருத்தரங்குகளில் பேசப்பட்டவை, கட்டுரைகளாக வெளிவந்தவை. இந்த நூலில் 10 கட்டுரைகள் இருப்பினும் நான்கு கட்டுரைகள் மிக மிக முக்கியமானவை. 1. பாரதியாரும் இந்தியத் தத்துவமும், 2. முதல் பாரதி திறனாய்வாளர் சுவாமி விபுலானந்தர், 3. பாரதி புகழ் பரப்பிய பாவேந்தர் பாரதிதாசன், 4. பாரதி புகழ் பரப்பிய பணியில் தோழர் ப. ஜீவானந்தம். பாரதி புகழ் பரப்பிய ராஜாஜி என்ற கட்டுரை பாரதியாரின் சில கவிதைகளை மொழியாக்கம் செய்யும் பணியிலும் ராஜாஜி ஈடுபட்டார் என்பதைச் சொல்கிறது. அவரது ஆங்கில மொழிபெயர்ப்பையும் தந்துள்ளார் நூலாசிரியர். இந்த நூலைப் படித்து முடிக்கும்போது பாரதி புகழ் பரப்பியவர்களுள் பெ. சு.மணியும் ஒருவர் என்பதை உணர முடியும். நன்றி:தினமணி, 13/7/2015.