பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்
பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.சு. இளங்கோ, இசையமுது பதிப்பகம், பி3, சுங்கவரி அலுவலர் குடியிருப்பு, 75, தேவாலய முதன்மைச் சாலை, பெருங்குடி, சென்னை 96, பக். 488, விலை 180ரூ.
துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததைப்போல பாரதி வழித்தடத்தில் பாரதிதாசன் தோன்றினார் என்ற நூலாசிரியரின் முன்னுரையே நூலுக்கு ஒரு கம்பீரம் தருகிறது. பாரதிதாசனின் திரைத்தமிழ் வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வு நூல் இது. அவர் எழுதிய ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்களை வைத்து ஆய்வு செய்துள்ளார் நூலாசிரியர். அவற்றை நாம் படித்துப் பயன்பெற, அவற்றை முழுமையாகவும் தந்துள்ளார். பாரதிதாசனுக்கு சினிமா உலகம் மேல்இருந்த கருத்துக்களை முன் வைத்து நடத்தப்பட்டிருக்கும் இவ்வாய்வும் சில நிகழ்வுகளின் பதிவும் முக்கிய கவனத்தை ஏற்படுத்தும்.
—-
ஞானமாலிகா, கவியரசு கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 168, விலை 80ரூ.
1954 வாக்கில் கவியரசு கண்ணதாசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தன்னைப் படகாகவும் காங்கிரஸை கடலாகவும் உருவகித்து எழுதிய கடலும் படகும் காங்கிரஸ் மீது கண்ணதாசனுக்கு இருந்த கோபத்தைக் காட்டும். காங்கிரஸ் பிளவுபடத் தொடங்கியபோது தன் அரசியல் வாழ்வைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன் என்று எழுதுகிறார். இவை தவிர்த்து மற்றவை அனைத்தும் அரசியல் பின்னணி இல்லாதவை. இளம் பருவக் காதல், தனிமைப் புலம்பல், சித்தார்த்தன் பற்றிய உருவகம், சிந்தனை அலைகள், வனவாசத்தில் விட்டுப்போன சுயசரிதம், கவிஞர்கள், மது என்று பல விஷயங்கள் ஒன்றுக்கொன்றும் ஞானத்தைத் தொட்டுவிட்டு வருபவை. நன்றி: குமுதம், 30/10/2013.