பிணங்களின் கதை
பிணங்களின் கதை, கவிப்பித்தன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 160, விலை 120ரூ.
நாம் வாழும் சமூகத்தின் பாரம்பரியத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் விழுமியங்கள் நவீனம் என்ற பெயரில் இப்போது மெதுவாகச் சிதைக்கப்படுவது நம்மில் எத்தனை பேர்? ஆனால், தொண்டை மண்டலத்தில் பிறந்த நூலாசிரியர், தனது இந்தச் சிறுகதை நூலின் மூலம் தாம் பிறந்த மண் பாரம்பரியத்தை இழந்து வருவது குறித்து கனத்த இதயத்துடன் ஆதங்கப்பட்டுள்ளார். புதுமை என்ற பெயரில் எப்படி எல்லாம் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம்? இதனால், நம் சமூகத்தின் அஸ்திவாரம் எந்த அளவுக்கு ஆட்டம் கண்டுள்ளது என்பதை நினைத்து மனம் வேதனைப்படுகிறது. ‘புதிய தரிசனம்’ சிறுகதையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இந்தச் சமுதாயத்தில் சந்திக்கும் கொடூரமான அவலங்கள், ‘வண்ணாந்துறை’ சிறுகதையில் நோய்க்கு மருந்து உள்பட பல்வேறு விஷயங்களில் நம் வீட்டு முதியவர்களின் அறிவுரைகளை எந்த அளவுக்கு நாம் புறக்கணிக்கிறோம் என்பதும், ‘கோல்மாத்து’ சிறுகதையில் நம் தமிழகத்தில் இன்றைக்கும் பல கிராமங்களில் சமூகத்தில் அந்தஸ்தைப் பெற கோலை (குச்சி) சுழற்சி முறையில் மாற்றிக்கொள்ளும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருவதும் கூறப்படுகிறது. நூலாசிரியரின் சமூக அக்கறையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தொண்டை மண்டலத்தின் சிறப்பை அறிய விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் ஐயமில்ல. நன்றி: தினமணி, 29/12/2014.