புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
புயலுக்குப் பின்னே பூந்தென்றல், சுப. உதயகுமாரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-3.html
சுப. உதயகுமாரன் யார், கூடங்குளம் தொடங்கும்போதெல்லாம் அவர் எங்கே போனார்… இதுபோன்ற கேள்விகளை கூடங்குளம் அணு உலை ஆதரவாளர்கள் அடிக்கடி கேட்பார்கள். எல்லாக் காலத்திலும் போராட்டம் நடத்தக்கூடியவராகத்தான் இருந்துள்ளார் என்பதை நிரூபிக்கும் புத்தகம் இது. 1981 முதல் 87 வரை எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார் சு.ப.உதயகுமாரன். ஒரு பள்ளி ஆசிரியர் இவ்வளவு பெரிய ஆளுமையாக வளர்வதற்கான அடித்தளம் அங்குதான் போடப்பட்டது. எத்தியோப்பியாவில் உள்ள டிக்ரை மாநிலத்துக்குட்பட்ட மைச்சோ என்ற ஊரில் இவர் ஆசிரியராக இருந்துள்ளார். அந்தக் கிராமத்தைச் சுற்றி டிக்ரை மக்கள் விடுதலை முன்னணியின் கெரில்லா போராட்டம் நடந்துகொண்டிருந்தது. இந்தக் கிராமம் மட்டும் அரசு ராணுவத்தின் கையில் இருந்தது. ராணுவ வீரர்களின் அட்டூழியம், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளின் அராஜனம், பிளவுபட்ட குடும்பங்கள், பீதிக்குள்ளான மக்கள், மது மயக்கம், விபசாரம், குறிக்கோள் அற்ற இளைஞர்கள் என மைச்சோ சமூகம் முடங்கிக்கிடந்தது. இந்த சமூகத்தின் இளம் உள்ளங்களைத் தூக்கிவிடும் பொறுப்பு என்னை மிகவும் கவர்ந்தது என்கிறார் உதயகுமாரன். பள்ளியில் ஆங்கில மன்றம் ஆரம்பித்தார். மாணவர்களுக்குப் பேச்சு, கலை, எழுத்துத் திறன் பயிற்சி கொடுத்தார். யுனெஸ்கோ மன்றம் ஆரம்பித்து, உலக சமாதானம் பற்றிச் சொல்லிக்கொடுத்தார். மனிதன் என்ற அடிப்படையில் இந்தியன் எத்தியோப்பியன் போன்ற தேசிய அடையாளங்களுக்கு வெளியே எனக்கு சில கடமைகளும் உரிமைகளும் இருப்பதாக உணர்ந்தேன். எனது வகுப்புகள் விறுவிறுப்படையத் தொடங்கின. மாணவ, மாணவியர் வகுப்பறைக்கு வெளியே என்னைச் சந்தித்து தங்கள் துன்பங்களைத் துயரங்களைப் பகிர்ந்துகொண்டனர் என்று சொல்லும் உதயகுமாரன் அந்த மக்களின் துன்பங்களைத் தாங்கும் இடிதாங்கியாகவும் இருந்துள்ளார். ஒருநாள் இவர் வகுப்பு நடந்துகொண்டு இருந்தபோது துப்பாக்கியுடன் நுழைந்த ராணுவ வீரர் முளு என்ற சிறுமியை தன்னோடு வருவதற்கு அழைத்துள்ளார். நீங்கள் யாராக இருந்தாலும் கைதுசெய்வதற்கு வாரன்ட் வேண்டும் என்று சொல்லி கடைசி வரை அந்தப் பெண்ணை அனுப்ப சுப. உதயகுமாரன் சம்மதிக்கவில்லை. பிறகு பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் அந்தப் பெண் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். முளுவின் உயிருக்கோ பாதுகாப்புக்கோ குந்தகம் நேர்ந்தால் அதற்குத் தலைமை ஆசிரியரே பொறுப்பு என்று கூறி, சுமார் 50, 60 பேரை அதில் பங்கேற்கவைத்தது மனநிறைவைத் தந்தது என்று எழுதியிருக்கிறார். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துச் சுதந்திரம் இல்லாத ஒரு நாட்டில் தனது இளமைப் பருவத்தைக் கடந்ததால், சுப. உதயகுமாரனின் உள்ளத்தில் கிளம்பிய கோப நெருப்பு இன்னமும் அணையாமல் இருக்கிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 3/7/2013.