புலித்தடம் தேடி
புலித்தடம் தேடி, மகா. தமிழ்ப்பிரபாகரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-137-9.html
மூன்று ஆண்டுகளுக்கு முன் மரண ஓலத்தில் இருந்த ஈழத்தில் இன்று மயான அமைதி. பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொடூரப் போர் அது. கொத்துக் குண்டுகளுக்கு பலியானோர் போக மிச்சம் இருப்பவர்களை, பட்டினி போட்டும் பணியவைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவைக்கும் இனவெறித் தந்திரம் மட்டுமே அங்கு செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையோ உலக நாடுகளோ இதைப் பற்றி பேச ஆரம்பித்தால் உடனே அரசியல் தீர்வு. 13வது சட்டத் திருத்தம், வளர்ச்சித் திடங்கள் என்று வாய்மாலம் காட்டுகிறார்களே தவிர தமிழர்களுக்கான வாழ்க்கைத் தீர்வைக் காணமுடியவில்லை. இதுபற்றிப் பேசினாலே, அங்கே இருந்து அதைப் பேசக்கூடாது, எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள் என்று ராஜபக்ஷேக்கள் சொல்வார்கள். அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சொகுசுப் பயணிகளாகச் சென்றவர்கள் அரசாங்கம் நினைத்ததைத்தான் சொல்வார்கள். மனசாட்சிப்படி, பார்த்ததைச் சொல்லக் கூடியவர்களை இலங்கைக்குள் அனுமதிப்பது இல்லை. இந்த நிலையில் சுற்றுலாப் பயணியாக சென்று முடிந்தவரை அனைத்து இடங்களையும் பார்த்து, தமிழ் மக்களின் மனவோட்டங்களை, வாழ்க்கை முறையை நேரில் கண்டுவந்தவர் மகா. தமிழ்ப் பிரபாகரன் என்ற இளைஞர். அதைத் தொடர் கட்டுரையாக ஜுனியர் விகடன் இதழில் எழுதினார். அந்தக் கட்டுரைகளின் முழுமையான தொகுப்புத்தான் இந்தப் புத்தகம். இலங்கை அரசியல், அங்கு தமிழ் மக்கள் நடத்திய அகிம்சைப் போராட்டம், ஆயுதம் தாங்கிய யுத்தம், சிங்கள ராணுவம் நடத்திய இனப்படுகொலைகள், இறுதி யுத்தம் ஆகியவை பற்றி ஏராளமான புத்தகங்கள் உண்டு. ஆனால் போருக்குப் பிந்தைய ஈழம், அந்த இடங்கள், மக்கள் நிலைமை பற்றிய புத்தகங்கள் இல்லை. அதுவும் நேரடி சாட்சி எழுதிய பதிவுகள் இல்லை. அந்த வரலாற்றுக் கடமையை மகா. தமிழ்ப்பிரபாகரன் துணிச்சலாகச் செய்துள்ளார். அவர் மீது சந்தேகப்பட்டு சிங்கள ராணுவ வீரர்கள் விசாரணை செய்த காட்சியில் தொடங்கும் இந்தப் புத்தகம், ஒட்டுச்சுட்டான், முல்லைத் தீவு, கிளிநொச்சி, பரந்தன், சின்ன உப்பளம், ஆனையிறவு, பூநகரி என அனைத்து தமிழ்ப் பகுதிக்கும் அழைத்துச் செல்கிறது. வடக்கு மாகாணம் மட்டுமல்ல கிழக்கையும் மலையக மக்களையும் அவர் சந்தித்துள்ளார். அன்றாட வாழ்க்கை, அரசியல் சுதந்திரம் ஆகிய இரண்டு கோரிக்கைகள் அந்த மக்களின் எண்ணங்களாக உள்ளன. இந்த இரண்டுக்குமான எந்த உத்தரவாதமும் இல்லாத அரசியல் சூழ்நிலையே அங்கு உலவுகிறது என்பதைச் சொல்கிறார். தமிழர்கள் மீதான தாக்குதல்கள் இப்போது இஸ்லாமியர்கள் மீது திரும்பியுள்ள சாட்சியுடன் புத்தகம் முடிகிறது. என்னை ஒரு நடைப்பிணமாக்கிய பயணம் இது. அவ்வளவு காயங்களோடும் வலிகளோடும் வறுமையோடும் இருந்தும் என்னை உபசரிப்பதில் அங்கு வாழும் மக்கள் துளியும் குறை வைக்கவில்லை. அதுதான் தமிழரின் குணம் என்கிறார் தமிழ்ப்பிரபாகரன். அந்தக் குணத்துக்காகவாவது நல்ல வாழ்க்கை கிடைக்காதா? -புத்தகன். நன்றி; ஜுனியர் விகடன், 17/7/13