புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
புள்ளிகள் கோடுகள் கோலங்கள், பாரதி மணி, வம்சி புக்ஸ், பக். 600, விலை 550ரூ.
தமிழ் சினிமாவில், முதல்வராக பலமுறை நடித்த பாரதி மணியைப் பற்றிய புத்தகம் இது.ஆனால் நிஜத்தில் முதல்வர்களை காட்டிலும், அதிக பலம் படைத்த அதிகார மையமாக இவர் இருந்ததை, இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. தொழிலதிபர் பிர்லாவின் செயலர். நாடக சபையின் நிர்வாகி என இவரின் பல்வேறு முகங்களை, புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர் குறித்து சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்ற பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள், பாரதிமணிக்கு வந்த கடிதங்கள், இதில் தொகுக்கப்பட்டுள்ளன. டில்லியின் அதிகார மையங்கள் குறித்து அறிய விரும்புவோர் இந்த நூலை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். நன்றி: தினமலர், 12/1/2015.
—-
மெனிஞ்சியோமா, கணேசகுமாரன், யாவரும் பப்ளிகேஷன்ஸ், பக். 84, விலை 80ரூ.
மெனிஞ்சியோமா என்ற மூளையில் முளைத்த வைரஸ் கட்டியினால் பாதிக்கப்பட்டவனின், உள்மன உலகம், இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திடீரென யாருக்காவது வலிப்பு வரும்போது, உதவும் நம்மால், அந்த நேரத்தில் அவர்கள் என்ன உணர்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியுமா? அவர்களது உளவியலை புரிந்து கொள்ள முடியுமா? ஐ.சி.யூ. பிரிவில், அறுவை சிகிச்சைக்கு ஆளாகும் நோயாளியின் பதற்றம் நிறைந்த இரவு எப்படி இருக்கும்? சக நோயாளிகளின் மீதான அனுதாப பார்வை என்னவாக இருக்கும்? இவைதான் இந்த நாவலின் கருக்களம். இந்த நாவலில், அறிவியலும் நவீன தமிழும் இரண்டறக் கலந்து உள்ளன. கூடவே, வலிப்பு வருகின்றோருக்கு இரும்பு பொருட்களை தந்தால், வலிப்பு நின்றுவிடும் என்ற மூடநம்பிக்கையையும் இந்த நாவல் உடைக்கிறது. நன்றி: தினமலர், 11/1/2015.