பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை
பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை, ஆங்க் ஸ்வீ சாய், அடையாளம், புத்தாநத்தம், விலை 320ரூ.
பாலஸ்தீனத்தில் தொடரும் துயரங்கள் இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் ஒரு சீனர். இவர் சிறு வயதில் இஸ்ரேலிய ஆதரவாளராக வளர்க்கப்பட்டவர். அராபியர்கள் குறித்த எதிர்மறையான எண்ணமே அவருக்கு இருந்துள்ளது. 1982ம் ஆண்டில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் பெய்ரூட் நகரத்தை இடைவிடாமல் தாக்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். இஸ்ரேல் குறித்த பார்வை மாறத் தொடங்கியது. பெய்ரூட்டில் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்குச் சேவை செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இவர் லண்டனில் பார்த்துவந்த பணியை ராஜினாமா செய்தார். இளம் வயதில் கணவரைப் பிரிந்து பெய்ரூட்டுக்குச் சென்ற இவர் சப்ராசடிலா படுகொலைச் சம்பவங்களை நேரில் பார்த்தார். பெற்றோர்களைப் பறிகொடுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான அநாதைக் குழந்தைகளின் முகங்கள் இஸ்ரேல் குறித்த இவரது நல்லெண்ணத்தை மாற்றின. மனித குலம் மிகவும் நாகரிகமாகிவிட்டதாகச் சொல்லப்படும் இப்போதும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலைத் தொடுத்துவரும் இன்றைய நாட்களில் இப்புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1982ல் நடந்த துயரச் சம்பவங்களைப் பற்றி எழுதிய வர்ணனைகள் நேற்றும் இன்றும் மாற்றமின்றி பொருத்தமாக இருப்பது வேதனைக்குரியது. நன்றி: தி இந்து, 2/8/2014.
—-
நாம் விரும்பியதை அடைய உதவும் உள்மன பேச்சுக்கலை, புதிய புத்தக உலகம், சென்னை, விலை 50ரூ.
சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பழக்க வழக்கங்களை மாற்றவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், விரும்பியதை அடையவும் பேசும் கலை எப்படி உதவுகிறது என்று நூலாசிரியர் எஸ். தணிகை அரசு விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 30/7/2014.