மண் கசந்தால் மானுடமே அழியும்
மண் கசந்தால் மானுடமே அழியும், பி. தயாளன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 86, விலை 60ரூ.
நீர், நிலம், காற்று என அனைத்தையும் நாம் மாசுபட வைத்துவிட்டோம். அதனால் மழை தரும் தாவரங்கள் அழிந்து வருகின்றன. உணவு தரும் பயிர்கள் இல்லாமல் போகின்றன. ஆலைகளின் கழிவு நீரால், நீர் நிலைகள் மாசடைந்து மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் மாசடைய வைக்கிறது. வளமான, அழகான, இனிமையான, சத்தான மண்ணைக் கெடுத்து, வருங்கால இனத்தையே கெடுத்து வருகிறான் மனிதன். நமது அடிப்படை வாழ்வாதாரமே இப்போது கேள்விக் குறியாகிக் கொண்டு வருகிறது. இவற்றிலிருந்து விடுபட, சுற்றுச் சுழலை பாதுகாக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் பாடுபட வேண்டும் அல்லது ஓர் இயக்கமாக நின்று அதனைச் செய்தாக வேண்டும். அதுதான் இன்றைய தேவை என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் நூல்.
—-
பழஞ்சீனக் கவிதைகள், தமிழில் வான்முகில், மீனா கோபால் பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, பக். 216, விலை 180ரூ.
கன்ஃபூசியசு காலத்தில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட சீனக் கவிதைகளில் சிலவற்றை தமிழில் மொழி பெயர்த்து பெருமை சேர்த்துள்ளார் வான்முகில். செய்தற்கரிய பணி இது. இத்தமிழாக்கம் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருந்து செய்யப்பட்டது என்றாலும், பழஞ்சீனக் கவிதைகளை நாம் துய்த்துணர சீன மூலத்தினைப் படித்த சீனர்கள் பெற்ற உணர்வின் சில கூறுகளையாவது தமிழ் வாசகர்களிடம் உருவாக்குவதே இம்மொழிபெயர்ப்பின் நோக்கம் என்கிறார் ஆசிரியர். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சீனப் பெருஞ்சுவருக்குப் பின்னால் எழுந்த சீன இலக்கியத்தை தமிழுலகத்திற்கு கொடையாகத் தந்துள்ளார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 17/7/2013.