மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம்
மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர். குப்புஸ்வாமி, 8, தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 552, விலை 350ரூ.
மஹாபாரதத்தை இதற்கு முன் படித்தவர்கள் பெற்ற அனுபவத்திற்கும் இந்நூலைப் படிப்பவர்கள் பெறும் அனுபவத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரு எளிமையான சுவையான நாவலைப் படிப்பது போலத்தான் உள்ளது. அதே சமயம் இதில் இல்லாததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அறிவுச் செரிவான ஒரு பெட்டகத்தை திறந்து பார்த்த உணர்வும் எழுதுகிறது. மகாபாரதத்தைப் பற்றி நூல் எழுதுவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமன்று. தமிழ் மட்டும் தெரிந்த சமஸ்கிருதம் தெரியாதவர்கள்கூட பாரதத்தின் உண்மைப் பொருளை அறிந்து கொள்ளவைக்கும் நூல். பாரதத்தில் வரும் கிளைக் கதைகளை முழுவதும்கப் படித்துத் தெரிந்து கொள்ள ஒருவருக்கு ஒரு முழு ஆயுள் தேவைப்படலாம். அந்த சிரமத்தை படிப்போருக்குத் தராமல் நமக்கு வேண்டியவற்றை திரட்டியெடுத்து தந்துள்ளார் ஆசிரியர். இப்படி நிறைய சிறப்புக்கள். தமிழ் உரைநடையில் அதுவும் சமஸ்கிருத ஸ்லோகங்களை எடுத்துக்காட்டி மகாபாரதக் கதைகயைச் சொல்லி வாழ்க்கையில் முன்னேற வழி வகுத்திருப்பது சிறப்பு.
—-
லண்டன்-ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் தலைநகரம், மு. சங்கையா, வாசிப்போர்க்களம், மதுரை, எம்.எம்.எஸ். காலனி, 8 வது தெரு, மதுரை 14, பக். 160, விலை 100ரூ.
200 ஆண்டுகளாக நம்மை சுரண்டிக் கொழுத்த ஒரு சாம்ராஜ்யத்தின் தலைநகரம்தான் லண்டன். அதே சமயம் இந்தியச் சமுகத்தில் அவர்களால் ஏற்பட்ட நல்ல மாற்றங்களையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்களின் அந்த லண்டன் மாநகரம் இப்போது எப்படி இருக்கிறது என்பதை நூலாசிரியர் பயணத்தின்போது கண்டு ரசித்தவைகளை ஒரு அழகான நூலவாக பதிவு செய்திருக்கிறார். லண்டன் உள்ளிட்ட பிரிட்டனின் பல இடங்களை ரசித்ததோடு அவற்றின் முழுத்தகவல்களை சேகரித்தும் தந்துள்ளார். அருங்காட்சியம், ஸ்டோன் ஹென்ஜ், லண்டன் டவர் அரண்மனை. பக்கிங்காம் அரண்மனை, சித்திரவதைக் கூடம் என்று ஒன்றுவிடாமல் எல்லா பகுதிகளையும் நமக்குத் தருகிறார். லண்டனுக்கு நாமே போய் வந்த உணர்வு. நூலை வாசிக்க வாசிக்க எழுகிறது. நன்றி; குமுதம், 14/8/13.
—-
போதை ராஜ்யம், ரா. கி. ரங்கராஜன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ.
போதைப் பொருள் கடத்தும் மாபியா கும்பலின் ஆதிக்கத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கிரைம் நாவல். கடத்தல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்பவன் எஸ்கொபார். பயங்கர போதைக் குற்றங்களுக்காக அவனைத் தங்களிடம் அனுப்பும்படி அமெரிக்கா அரசு கேட்க, கொலம்பியா அரசும் ஒப்புக்கொண்டது. எஸ்கொபாரையும் அவன் கும்பலையும் நாடு கடத்தவேண்டும் என்று குரல் கொடுப்பவர்களைப் பிணைக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு சித்திரவதை செய்கிறது போதைக்கும்பல். இதிலிருந்து கதையின் வேகம் சூடு பிடிக்கிறது. திடுக்கிடும் சம்பவங்களின் பின்னணியில் படிக்கத்தூணடும் ஆவலுடன் விறுவிறுப்பாக இந்நாவலை படைத்திருக்கிறார் ரா.கி. ரங்கராஜன். நன்றி: தினத்தந்தி, 7/8/13.