முதல் கோணல்
முதல் கோணல், ஏ.எஸ். பன்னீர்செல்வன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 60ரூ.
பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் வாழும் மக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு வெளியிடப்படும் மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்பதை நூலாசிரியர் விளக்கமாக அளித்துள்ளார். சுற்றும் முற்றும் தொகுப்பின் 2ம் பாகமான முதல் கோணல் நூலில் ஒபாமா முதல் இலங்கை பிரச்சினை வரை அனைத்து தகவல்களும் அலசப்பட்டுள்ளது. முதல்கோணலை எவ்வாறு சரி செய்வது என்பதற்கு ஒரு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/3/2014.
—-
வடலூர் வாய்மொழி, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை 17, பக். 144, விலை 90ரூ.
இராமலிங்க அடிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உதவும் நூல். அவரின் திருஅருட்பாவின் சிறப்பியல்புகளையும், அவற்றில் அடங்கியுள்ள தத்துவ நெறிகளையும் விளக்கமாக எடுத்துக் கூறுகிறது. திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை நன்கு படித்துணர்ந்து அவற்றில் உள்ள சிறந்த கருத்துகளை இராமலிங்க அடிகள் தனது பாடல்களில் நயம்பட எடுத்தாண்டுள்ளதை மேற்கோள்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். வள்ளலாரின் சன்மார்க்கக் கொள்கையை சன்மார்க்க சங்கத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் நூலாகவும் இது அமைந்துள்ளது. வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் அவருக்கு கோயில் கட்டி தெய்வமாக வழிபடுகின்றனர். ஆனால் இறைவனைப் பற்றிய உண்மையை அறியாதவர்களே மற்றவர்களைத் தெய்வதாம வழிபடுகின்றனர் எனக்குறிப்பிட்டு தன்னை வழிபடுவதை வெறுத்து ஒதுக்கிய மகான் வள்ளலார் என்பதை நூலாசிரியர் சுட்டி காட்டியுள்ளார். வள்ளலார் திருமணம் செய்து கொண்டாலும், இல்லற வாழவைத் துறந்து துறுவறம் மேற்கொண்டு, மக்கள் அனைவரும் ஜாதி, மத பேதமின்றி ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். முருகப் பெருமான் உள்ளிட்ட கடவுளர்களைப் பற்றி வள்ளலார் பாடல்களைப் பாடிய போதிலும் இறைவன் உருவமற்ற ஜோதியின் வடிவமானவர் என்பதை வலியுத்தினார் என்பதையும் நூலாசிரியர் விளக்கிக்கூறியுள்ளார். இந்த நூலின் ஒரே குறை ஆங்காங்கே காணப்படும் எழுத்துப் பிழைகள். நன்றி: தினமணி, 17/3/2014.