மெய்ப்பொருள் காண்போம், மேனிலை அடைவோம்
மெய்ப்பொருள் காண்போம், மேனிலை அடைவோம், சிங்கப்பூர் சித்தார்த்தன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
இலக்கிய வளமும், இலக்கண செழுமையும் மிக்க, தூய்மையான தமிழ்மொழி, இன்று பிறமொழி கலப்பால், தன்சீர் இழந்து வருவதும், தம் பண்பாட்டு சிறப்பை தமிழர்கள் மறந்து வருவதும் கண்ட இந்நூலாசிரியர், மொழி, பண்பாடு இரண்டின் உயர்வையும் ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து போற்றி, கடைபிடித்து, பாதுகாக்க வேண்டும் என்ற நன்நோக்கில் இந்நூலை படைத்துள்ளார். உண்டாலம்ம இவ்வுலகம் எனும் புறநானுறு, 182ம் பாடலை விளக்கிய நூலாசிரியர், இன்றைய நிலை குறித்து ஆதங்கப்படுவதும் (பக். 15), மனித நேயத்தின் உயர்வை, கணியன் பூங்குன்றனாரின், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற செய்யுளுடன் (புறம் 192) விளக்குவதும் (பக். 21), சுயநலவாதிகளின் கொடுஞ்செயலை, காந்தியடிகள் ஹரித்துவாரில் கண்ட நிகழ்ச்சியின் வாயிலாக விளக்குவதும் (பக். 37), தொல்காப்பியம் அரியதோர் வரலாற்றுக் கருவூலம் என்று விவரிப்பதும் (பக். 61), வேறு எம்மொழியிலும் இல்லாத தமிழ் மொழியில் மட்டுமே அமைந்துள்ள பொருளிலக்கணத்தின் அகத்திணை, புறத்திணைகளின் சிறப்பை விளக்குவதும் (பக். 75), தமிழர்களின் தொன்மையான வழிபாடு, இயற்கையை வழிபடுதலும், நடுகல் வழிபாடும் என்று அறுதியிட்டு கூறுவதும் (பக். 81), மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் கூறும் அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப என்பதை விளக்கி, சமநிலை என்பது உலகியலுக்கு பொருந்தாது என்று வாதிடுவதும் (பக். 115), குற்றியலுகரத்தின் சிறப்பை விளக்குவதும் (பக். 154), பொங்கல் திருநாளின் உட்பொருளை உணர்த்துவதும் (பக். 284), ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தை காட்டுவதோடு, படிப்பதற்கும் சுவாரசியமானவை. இந்நூலில் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு மற்றும் பல நூல்களின் மேற்கோள்கள் இருப்பதால், பன்னூல் படித்த மனநிறைவு கிடைக்கும் என்று உறுதியாய் கூறலாம். நல்ல அச்சும், கட்டுமானமும் நூலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 9/11/2014.