மேற்கத்திய ஓவியங்கள்
மேற்கத்திய ஓவியங்கள், பி.ஏ. கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 850ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-231-9.html ஓவிய ரசனை மேற்கத்திய ஓவியங்களைக் குறித்து சிலாகிக்கும் பி.ஏ. கிருஷ்ணனின் இந்தப் புத்தகம் தமிழுக்குப் புதியது. 30,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கால மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்களில் தொடங்கி பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரையுள்ள காலகட்டத்தில் உருவான ஓவியங்களைக் குறித்த நூல் இது. இந்தப் புத்தகம் எடுத்தாளும் களம் மிகப்பெரியது. வெறும் அழகுணர்ச்சி சார்நத் கலைவடிவமாக ஓவியங்களை அணுகவில்லை அவர். வரையப்பட்ட காலகட்டம், ஓவியரின் வாழ்க்கை, ஓவியங்கள் உருவான தொழில்நுட்பம், மத மற்றும் அரசியல் தாக்கங்கள் என்று அவற்றின் பின்புலத்தையும் விவரித்து ஒவ்வொரு ஓவியத்தையும் நினைவில் நிற்கும்படி செய்கிறார். செறிவான, சிக்கலில்லாத மொழிநடையில் மிகச் சுவாரசியமாய் எழுதப்பட்ட புத்தகம். ஓவியங்கள் குறித்த விவரங்களில், அரித்துருவாக்கல், பரப்பின் கட்டமைதி, வெளியின் ஆழம், முன் குறுக்கம் என்று நயமான கலைச்சொற்களைத் தேர்ந்தெடுத்து வாசகனுக்குப் புரியும் வண்ணம் அதற்கிணையான ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் தந்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே மேற்கத்திய ஓவியங்கள் ஆசிரியருக்கு அறிமுகமானவை என்பது சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஓவியங்களை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் அருங்காட்சியங்களில் அவர் நேரடியாகக் கண்டு ரசித்த அனுபவத்தில் எழுதியவை. புத்தகத்தின் நம்பகத்தன்மைக்கு மிகப்பெரிய காரணம் இது. எகிப்திய, கிரேக்க, ரோமப் பேரரசின் ஓவியங்கள் என்று துவங்கி, மறுமலர்ச்சிக் காலத்திற்கு முன்னால் நிலவியச் சூழலை விவரித்து, Renaissance எனப்படும் இத்தாலிய மறுமலர்ச்சியின் துவக்கத்தையும், கிருத்துவ மதத்தின் தாக்கத்தையும் சொல்லி, பதினான்காம் நூற்றாண்டில் உலக மக்கள் தொகையை 50 சதவீதம் குறைத்த கறுப்புச் சாவினால் ஓவியங்களும் ரோமன் கத்தோலிக்க மதமும் அடைந்த பாதிப்பைப் பற்றி பேசி, ஓவியங்களோடு பயணிக்கிறார். அந்தப் பயணத்தில் 70 ஓவியர்களையும் அவர்கள் வரைந்த 159 ஓவியங்களையும் குறித்து நுட்பமாகவும் சுவாரசியமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஜியோட்டோ, வான் ஐக், போஷ், பிரமாண்டே, மைக்கேலாஞ்சலோ, ரெம்ப்ரண்ட், ரஃபயேல், டூரர், மஸாச்சியோ, பாட்டி செல்லி, லியனார்டோ டா வின்சி, கரவாஜியோ, ரூபென்ஸ், ஃப்ரான்ஸ் ஹால்ஸ், வெர்மீர், ஜோசஃப் டெர்பி என்று பல புகழ் பெற்ற ஓவியர்களின் படைப்புகளை நுணுக்கமாய் விவரிக்கிறது. பி.ஏ. கிருஷ்ணன் களங்கமற்ற கண்களால் பார்த்து கலைப் பயணத்தைத் துவங்கி, அதைப்பற்றி கெட்டிக்காரத்தனமாக பேசி நமக்கெல்லாம் இந்தப் புத்தகம் மூலமாய் ஒரு பெரிய புதையலை கொணர்ந்திருக்கிறார். -ஆனந்த ராகவ். நன்றி: அந்திமழை, 1/9/2014.