மேலை அறிஞர் பார்வையில் தமிழ் நம் பார்வையில் அவர்கள்
மேலை அறிஞர் பார்வையில் தமிழ் நம் பார்வையில் அவர்கள் (பகுதி ஒன்று), தி. முருகானந்தம், தமிழ்ச்சோலை வெளியிடு, பக். 144, விலை 100ரூ.
தமிழை ஆராய்ச்சி செய்த மேலைநாட்டு அறிஞர்கள் பலரையும் பற்றி எழுதத் துவங்கும் நூலாசிரியர், ஹார்டி (ஆர்டி) என்பவர் செய்த ஆய்வை குறித்து இந்நூலில் விரிவாக எழுதி உள்ளார். ஆர்டி ஜெர்மானியர். தமிழ் வழக்கறிஞராக திகழ்ந்தவர். சமயவியல் பேராசிரியர். கிருஷ்ண பக்தியை விரகபத்தி என்றும், கிருணவம் என்றும் குறிப்பிடுவது புதுமை. திருமாலை குறிக்கும் மாயோன், மாயவன் என்ற பெயர்கள் கருமை நிறத்தால் வந்த பெயர்கள் என்கிறார். மாயோன், சேயோன் பற்றி குறிப்பிடும் நூற்பா, தொல்காப்பியத்தில் இடைச்செருகல் என்றும் அதைக் கிழித்தெறியலாம் என்றும் குறிப்பிடுவது ஆய்வு செய்ய வேண்டிய கருத்து. நப்பின்னை – பின்னை என்பவள் பின்னவள் (இளையவள்) என்றும், பின்னல சடையாள் என்றும் பொருள் கொள்கிறார். நூலின் பின் பாதியில் குறிப்புகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உள்ளது இந்த நூல். ஆய்வளார்கள் படிக்க வேண்டிய ஒன்று. -பேரா.ம.நா. சந்தான கிருஷ்ணன். நன்றி: தினமலர்,9/11/2014.
—-
புதுக்குறள், தீ. குப்புசாமி, எழில்மதி பதிப்பகம், தர்மபுரி மாவட்டம், விலை 75ரூ.
காலமாறுதலுக்கேற்ப புதுக்குறள் என்ற இந்த நூலில் புதுப்புதுக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. புத்தர், பெரியார், பிளோட்டோ போன்ற உலகப் பெரியார்களின் புரட்சிகரமான கருத்துகள் நூல் முழுக்க இருப்பதுடன், திருக்குறளின் சாயல் இந்நூலில் காணமுடிகிறது. நன்றி: தினத்தந்தி, 10/9/2014.