மொழிக்கொள்கை

மொழிக்கொள்கை, இராசேந்திர சோழன், மங்கை பதிப்பகம், 700, எம்.ஐ.ஐ. இரண்டாவது தலைமைச் சாலை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வேளச்சேரி, சென்னை 42, விலை 180ரூ.

மொழி என்று இல்லை, இனம், சாதி, மதம் உள்ளிட்டு சமகம் சார்ந்த எந்த ஒரு சிக்கலுமே தமிழக மக்களுக்கு அறிவுபூர்வமாக ஊட்டப்படாமல், அதுபற்றிய தெளிவை ஏற்படுத்தாமல் எல்லாம் தேர்தல், அரசியல்வாதிகளின் தன்னல நோக்கத்துக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளும் உணர்வு மட்டத்திலேயே இவை வைக்கப்பட்டு இருப்பதே எல்லாவற்றுக்கும்  காரணம் என்ற முன்னுரையுடன் எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதி இருக்கும் புத்தகம். தமிழனைப்போல் தமிழை உயர்த்தியவனும் இல்லை, தாழ்த்தியவனும் இல்லை என்பார்கள். மொழியின் பெயரையே தன்னுடைய பெயராக வைத்துக்கொள்ளும் இனம் மற்ற மொழிகளில் குறைவு. ஆனால் சொந்த மொழியை சிதைப்பதிலும் இந்த ஆர்வம் அதிகமாக இருப்பதும் நம்முடைய மொழியில்தான். மொழிதான் ஒர் இனத்தின் அடையாளம். அந்த மொழி சிதையுமானால், அந்த இனமும் சிதையும், இதற்கு வரலாற்றில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அத்தகைய சிதைவுக்கு ஆங்கிலக் கல்வி முறை அடித்தளம் அமைத்தது. இந்தியர்கள் தோற்றத்தாலும் நிறத்தாலும் வேறுபட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் சிந்தனை மற்றும் செயல்களால் வெள்ளையர் ஆக்கப்பட வேண்டும் என்று கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்திய மெக்காலே சொன்னதுதான் இன்று தமிழகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இத்தகைய மாற்றங்களை வரலாற்றின் ஆதாரங்களுடன் இராசேந்திர சோழன் அடுக்குகிறார். சமஸ்கிருதம் இருந்த இடத்துக்கு ஆங்கிலம் வந்ததும், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியைப் படிப்பது இந்திய தேசியத்தை வலியுறுத்தும் செய்கையாகப் பார்க்கப்பட்டதும், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியை நகர்த்திவிட்டு அந்த இடத்தில் மறுபடியும் ஆங்கிலம் அமர்ந்து கொண்டதும், அது அசைக்க முடியாத இடத்தைத் தக்கவைத்துக் கொண்டதுமான நிகழ்வுகள் ஒரு கலாசாரப் புரட்சியின் நகர்வுகளாகப் பட்டியல் இடப்படுகின்றன. தமிழைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்கள், தமிழுக்காக துளி நன்மையையும் செய்யவில்லை என்பதை ஆதாரங்களுடன் சொல்லும்போது ஆதங்கம் மட்டுமே மிஞ்சுகிறது. காமராஜரை முதல்வராகவும் சி.சுப்பிரமணியத்தைக் கல்வி அமைச்சராகவும் கொண்ட காலத்தில் கல்லூரிக் கல்வியில் தமிழைக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்… தி.மு.க ஆட்சிக் காலத்தில் தேய்ந்து உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த தமிழ் வெளியீட்டுக் கழகம், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. இந்திக்காகத் தீக்குளித்த தியாகிகளின் ரத்தம் காயும் முன் செய்யப்பட்ட துரோகம் என்று விளக்குகிறார். பள்ளிகளில், கல்லூரிகளில், கோயில்களில், நீதிமன்றங்களில், தமிழை அலங்கரிக்கச் செய்யும் ஆலோசனைகளை வரிசைப்படுத்தும் இவர், தமிழில் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற விதிமுறை வகுக்கப்பட்டால் மட்டும்தான் தமிழ் வளரும் என்கிறார்.இந்தியா பன்மொழி பேசும் பல்தேசிய மொழியாக, ஆட்சி மொழியாக, தொடர்பு மொழியாகப் பயன்படுத்த உரிமை பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அப்படிப்பட்ட உரிமைகள் எதையும் இந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களுக்கு வழங்கவில்லை. தமிழ்த் தேசத்துக்கும் அந்த உரிமை இல்லை என்பதை விளக்கவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நமக்கான பெருமையை நாமே மீட்டெடுக்கத் தூண்டுகிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 1/12/2012,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *