ரோமாபுரி யாத்திரை
ரோமாபுரி யாத்திரை, பாரேம்மாக்கல் கோவர்ணதோர், தமிழில் யூமா வாசுகி, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 380ரூ.
இந்திய மொழியில் எழுதப்பட்ட முதலாவது பயணநூல் என்று சொல்லப்படுகிறது ரோமாபுரி யாத்திரை. மலையாளத்தில் எழுதப்பட்டதை 18ம் நூற்றாண்டின் நிழலில் நின்று இன்றைய நவீனத்தின் எல்லையைத் தொட்டு, தன் கவித்துவத் தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் யூமா வாசுகி. கிறிஸ்தவ தேவாலயங்கள், நிறுவனங்களுக்குள் இருக்கக்கூடிய அதிகாரப்பூசல்தான் இந்தப் புத்தகத்தின் அடித்தளம். மலங்கரைப் பிரதேசத்துக்குப் பாதிரியாராக தங்களது இனத்தைச் சேர்ந்த ஒருவரே வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் 1778ல் ஒரு குழு ரோம் கிளம்புகிறது. மலையாளக் கரையில் இருந்து ரோம் வரையிலான கடல்வழிப் பயணமும் அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் ஆளுமைப் பீடங்களின் நடவடிக்கையும் தத்ரூபமாக விவரிக்கப்படுகின்றன. தங்கள் ஊரில் இருக்கும் தேவாலயத்துக்கு எங்கிருந்தோ பாதிரியார் வரக்கூடாது என்பதை தடுப்பதற்காக கரியாட்டி மல்பான், தோமா பாதிரியார் ஆகிய இருவரும் இங்கிருந்து அங்கு போய்ச் சொல்கிறார்கள். லத்தீன்காரன் ஆயராக வந்தால், அவன் ஒரு புண்ணியவனாக இருந்தால்கூட நம் மக்களுக்கு அறிவும் பலமும் ஏற்பட்டால், தங்கள் அதிகாரம் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக, தேவாலயங்களுக்கு நன்மையளிக்கும் ஏதோனும் காரியங்களை மனதறிந்து செய்வது சிரமம் என்று நினைக்கிறார்கள். எகிப்தில் அடிமையாக இருந்த இஸ்ராயேல் மக்களைக் காப்பாற்ற அவர்களின் இனத்தில் இருந்தே கடவுள் மோசேயை அனுப்பினார். அதற்காக வேறு எந்த இனத்தாரையும் நியமிக்கவில்லை. அதுபோன்று மிசிஹா கர்த்தாவும் தன் நற்செய்தியை உலகமெங்கும் அறிவிப்பதற்கு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தபோது, இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள இருப்பவர்களில் முக்கிய இனத்தவரான யூதர்களிடம் இருந்தே அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார் என்று பல்வேறு உதாரணங்களுடன் இந்த வாதங்கள் வைக்கப்படுகின்றன. கப்பலின் முன்னும் பின்னும் யானைத் துதிக்கை போன்ற சுழற்காற்று வீசியடித்தது என்பதைப் படிக்கும்போது, சுழற்காற்றை உணர முடிகிறது. இரவின் அச்சத்திலும் இருட்டில் நடக்கும் பேச்சுக்கும் மத்தியில் வீசும் காற்றுக்கும் அஞ்ச வேண்டாம் என்று இவர்கள் ஆராதனைப் புத்தகத்தில் படித்தவர்களாக இருந்தாலும், ஒருவிதமான அச்சத்துடனே இந்தப் பயணத்துக்கு நம்மையும் அழைத்துச் செல்கிறார்கள். இறுதியில் கரியாட்டி பேராயர் கோவாவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணம் அடைகிறார். தோமா பாதிரியார், நெடுங்காலம் மலங்கரை சபையை ஆள்கிறார். இன்றைக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் மண்ணும் நிலமும் மாறியிருக்கிறது. மனித மனங்கள் மாறவே இல்லை என்பதை இந்தப் பயணம் பாடம் எடுக்கிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 17/8/2014.