வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்

வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள், சந்திரா, பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.

நீலத்தின் காதல் காதல், காத்திருப்பு, தனிமை, பயணம், கோபம் உள்ளிட்ட பல உணர்வு சார்ந்த அனுபவங்களைத் தேக்கி வெளியாகியிருக்கிறது வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள் என்கிற இந்த கவிதை நூல். காதலைப் பிரயாதீர் என்ற தலைப்பில் இருக்கும் ஒரு கவிதை மட்டுமேகூட இந்த தொகுப்பை இன்னொரு உயரத்துக்குக் கொண்டு செல்ல போதுமானது என்று சொல்லலாம். மழையடிக்கும் பொழுதுகள் காதலைச் சொல்லும் தூத கணங்கள் அன்பர்களே உங்கள் காதல் முறிவினை அப்போது நிகழ்த்தாதீர்கள் என்று ஆரம்பிக்கும் இக்கவிதை முக்கியமானது. நீல நிறத்தின் காதலியாக இருக்கும் நூலாசிரியர் சந்திரா, அழகான சொற்பிரயோகங்களை நிகழ்த்துகிறார். நெருஞ்சிப்பூ போல சின்னதாகவாவது சிரி என்பதுபோல நிறைய சிறு சிறு காட்சி அனுபவங்கள் நூல் முழுக்க சிதறிக் கிடக்கின்றன. நன்றி: அந்திமழை, 1/2/2015.  

—-

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், எழுத்து, இயக்கம் முனைவர் மு.இளங்கோவன், இசை படத்தொகுப்பு இராஜ்குமார் ராஜமாணிக்கம், தயாரிப்பு பொன்மொழி இளங்கோவன், வயல்வெளி திரைக்களம்.

பழந்தமிழ்ப் பண் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரத் திவ்ய பிரபந்தம், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றை அவற்றிற்கு உரிய இசையுடன் பண்முறையில் பாடிக்காட்டியவர் குடந்தை ப. சுந்தரேசனார். இந்த ஆவணப்படத்தில் அவர் வாழ்வைக் காட்சிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார் முனைவர் மு.இளங்கோவன். பழந்தமிழ் இலக்கியங்களை தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களிலும், பொது அரங்குகளிலும் மக்கள் மன்றத்திலும் தகுந்த பண்ணில் பாடிக்காட்டி விளக்கியவர் சுந்தரேசனார். அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட பஞ்சமரபு என்ற பழந்தமிழ் நூலைப் பதிப்பித்து பங்காற்றியவர். இந்த ஆவணப்படத்தில் பல தமிழறிஞர்கள் தோன்றி இவரைப் பற்றிக் கூறுகின்றனர். அவரது இசைப்பாடல்கள் பலவற்றைக் காட்சிப்படுத்த காவிரிக்கரை முழுக்க அலைந்து திரிந்து பதிவு செய்திருக்கிறது படக்குழு. சிலப்பதிகாரப் பாடல்களை சுந்தரேசனார் குரலிலேயே தகுந்த காட்சி அமைப்புடன் காணமுடிவது பெரும் இன்ப உணர்ச்சியை அளிக்கிறது. ஒரு காட்சி அமைப்புக்காக நாட்டுமாடுகள் கூட்டத்தைத் தேடி அலைந்து கலப்பின மாடுகளையே கண்டதாகவும் பின்னர் அதற்காக கொல்லிமலை அடிவாரம் சென்று நாட்டு மாடுகளைப் படம் பிடித்ததாகவும் கூறுகிறார் இயக்குநர். ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழன் இசையை தொடர்ந்து ஒலிக்கச் செய்யும் இதுபோன்ற முயற்சிகளுக்கு தமிழ்ச்சமூகம் வரவேற்பை அளிக்க வேண்டும். நன்றி: அந்திமழை, 1/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *