வாலிப வாலி
வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 374, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-0.html
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன். கண்விழித் தாமரை பூத்திருந்தேன் எனும் காதல் பாடல், ஆனாலும் பாஞ்சாலி துயரமெல்லாம் பாவையினம் அறியாதோ? எனும் காப்பியச் செய்தி ஆனாலும், உலகம் சுழல்கிறது. அதன் பயணம் தொடர்கறிது – வெள்ளிக்கிமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன். வள்ளிக் கணவன் பேரைச் சொல்லிக் கூந்தலில் பூ முடித்தேன் என்ற பக்தி ரசமாயினும், திரை இசைக் கலைஞர் வாலி, தனிப் பெரும் சிகரமாகி, உயர்ந்து நிற்கிறார். பல தலைமுறை கண்ட சீரஞ்சீவி. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், சுத்தானந்த பாரதி, தேசிய விநாயகம் பிள்ளை, ச.து.சு. யோகியார் கவிதைகள் ஆரம்ப கால உணர்வு, நடிகர் வி. கோபாலகிருஷ்ணன் மூலம் சென்னைக்கு வந்தார். பின் அசுர வளர்ச்சி என்பது நாமறிந்தது. நீங்க எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ஏராளமான பாடல்கள் எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசனும், எழுதி இருக்கிறார். இருவர் எழுத்திற்கும் என்ன வித்தியாசம்? என்பது நெல்லை ஜெயந்தாவின் கேள்வி (பக். 124). வாலி பதில் தருகிறார், நான் எம்.ஜி.ஆருக்கு காதல் பாட்டு எழுதினாலும் சரி, தனிப்பாட்டு எழுதினாலும் சரி, அதில் அரசியல் குணாதிசியங்கள் பிரதிபலிப்பதுபோல் தான் எழுதுவேன். எம்.ஜி.ஆர் தனிப்பாடல்களில் சமூகக் கருத்துக்கள் நிறைய இருக்கும். அவரும் அதையே விரும்பினார். சிவாஜிக்கு குடும்ப சூழ்நிலை, தத்துவம், ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி எழுதுவேன். நிறைய விஷயங்களை படிக்க வேண்டும். நாளுக்கு நாள் நடைபெறும் உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய உடல் முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் உள்ளம் முதுமை அடையாமல் என்னால் வைத்துக் கொள்ள முடியும். தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் இந்தப் புத்தகத்தையும் நேசிக்கலாம். சுரங்கம் இது. -எஸ். குரு. நன்றி: தினமலர், 29/12/2012.
—-
ஆராய்ச்சித் தொகுதி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 380ரூ. To buy this Tamilbook online – www.nhm.in/shop/100-00-0001-864-5.html
சென்ற 40 ஆண்டுகளாகத் தமிழாராய்ச்சி செய்து வந்ததன் பயனாகச் செந்தமிழிலும் பிற பத்திரிகைகளிலும் பிரசுரங்களிலும் பல அரிய கட்டுரைகள் வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றை திரட்டி தொகுக்கப்பட்ட ஆராய்ச்சித் தொகுதிதான் இந்நூல். இக்கட்டுரைத் தொகுதியில் இலக்கியம், இலக்கணம், மொழி நூல், எழுத்து வரலாறு, நூற்பதிப்பு முறை, நூலாராய்ச்சி, தேச சரித்திரம், சமயம், பண்டை ஆசிரியர்கள், பண்டைத் தமிழ் மக்களின் ஒழுக்க நெறி, சிலாசானங்கள், இடப்பெயர்கள், பண்டைக்காலத்துச் சான்றோர்கள் முதலிய பல பொருள்கள் அடங்கியுள்ளன. கட்டுரைகள் அனைத்திலும் ஆராய்ச்சிநயம் சிறந்து விளங்குதலைக் காணலாம். தமது ஆராய்ச்சித் திறத்தாலும், கருத்துக்கள் தெளிவுபெற நிகழ்கின்ற இயல்பாலும், நிரம்பிய சொல்வன்மையாலும் ஓரிடத்தும் பொருள்மயக்க இடமின்றித் தெளிவுபெற எழுதும் தன்மையாளராகத் திகழ்கிறார் நூலாசிரியர் மு. இராகவையங்கார். இந்நூல் தமிழ் மக்களுக்கு அரியதோர் பொக்கிஷமாகத் திகழும். நன்றி: தினத்தந்தி, 2/1/2013.