விடுதலை இயக்கத்தில் தமிழகம்

விடுதலை இயக்கத்தில் தமிழகம், டாக்டர் ஜி.பாலன், வானதி பதிப்பகம், பக். 624, விலை 300ரூ.

விடுதலை இயக்கத்தில் பங்குபெற்ற வேலு நாச்சியார், கட்டபொம்மன், வ.உ.சி., திரு.வி.க., ம.பொ.சி., ஜீவானந்தம், கக்கன் போன்ற தமிழகத் தியாகச் செம்மல்களின் வரலாறுகளை தெளிவாகத் தொகுத்து, எழுதப்பெற்றுள்ள நூல். அண்ணல் காந்தியடிகள், தமிழகத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள், அழகாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளன. தேசியக்கொடி பற்றிய கட்டுரையில், தேசியக்கொடியின் தோற்றம், அமைப்பு, அளவு, வரையறை, வண்ணங்கள், சக்கரச்சின்னம் முதலியவற்றை விளக்கி, சுதந்திரக்கொடியான மூவர்ணக்கொடியின் வரலாறு விளக்கப் பெற்றுள்ளது. தேசியக் கொடியைப் பயன்படுத்தும் நெறிமுறைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழகத் தலைவர்களை விளக்கும் வரலாற்று நூலாக அமைந்த இந்த நூலை, மாணவர்கள் முதல் அனைவரும் படித்து பயன்பெறலாம். -பேரா. ம. நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 24/8/2014.  

—-

பேசும் அரும்புகள், சொ. அருணன், கபிலன் பதிப்பகம், பக். 128, விலை 100ரூ.

இந்நூலில் ஏதிலிகளாக காப்பகத்தில் அடைக்கலமான குழந்கைதளின் எண்ணவோட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொழுகொம்பில்லாமல் இருந்த அரும்புகளாம் பச்சிளம் குழந்தைகளின் படைப்புகள், தமக்குக் கிடைத்த கொழுகொம்பினைப் பற்றி படர்ந்து மணம் வீசுகின்றன. அக்குழந்தைகளின் அசாத்தியமான நம்பிக்கைகள், அனைத்துக் கதைகளிலும் வெளிப்படுகின்றன. வள்ளுவர் மிகுதியாக கூறிய நட்பு, பல கதைகளில் வரமாகவும், சாபமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. என் வாழ்வில் நான் பட்ட அடிகள் வெடியாக வெடித்தன என ஒரு கதையில் கூறப்பட்டுள்ளதுபோல், இக்குழந்தைகளின் காயமும், வலியும், மனக்குமுறல்களும், எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் வெளிப்படுகின்றன. பிஞ்சுகளின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்திய சமுதாய அவலங்கள் இப்படைப்புகளில் பிரதிபலிக்கின்றன. குழந்தைகளிலிருந்து குழந்தைகளுக்காக எனப் பெயரிட்டு எழுதப்பட்டிருந்தாலும், பெரியவர்களுக்கும் மிகப்பெரிய பாடம். -புலவர். சு. மதியழகன். நன்றி: தினமலர், 24/8/2014.

Leave a Reply

Your email address will not be published.