வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி
வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை ரூ.115.
உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பதுதான் இறையன்புவின் பேச்சும் மூச்சும். அதற்கான உத்தரவாதத்தைத்தான் இந்நூலில் தந்துள்ளார். குமுதம் ரிப்போட்டரில் தொடராக வந்தபோது அதன் தலைப்பே கவனத்திற்குரியதாகி பலரைப் படிக்கத் தூண்டியது. இன்றைய மனிதனின் ஒவ்வொரு நொடி உழைப்பும் அடுத்த பல தலைமுறையினரின் உயர்வாக அமையும் என்பதை நூல் முழுதும் பதியன் போட்டுள்ளார். விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் வியர்வை, உழைப்பிற்காகச் சிந்தியதாக இருக்க வேண்டும். அந்த வியர்வைதான் அவனது முன்னேற்றம். நாட்டின் முன்னேற்றம்.தன் சந்ததியரின் முன்னேற்றம் என்கிறார். வரலாறு, ஆன்மீகம், அறிவியல், கம்யூனிஸம், சோஸலிஸம் அத்தனையும் உழைப்பிற்குள் அடக்கம். படிக்கப் படிக்க நாமும் வியர்வை சிந்த வேண்டும் என்ற உழைப்பின் சூத்திரம் நம் மனதிற்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறது. நன்றி: குமுதம், 22/1/2014.
—-
ஒரு நாதஸ்வரத்தின் பயணம், வி. சந்திரசேகரன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 70ரூ.
நாதஸ்வர வித்வான்கள் சம்பந்தம் ராஜண்ணா சகோதரர்களின் நினைவுக்குறிப்புகள் அடங்கிய நூல் இது. சங்கித விமர்சனத்தை சாதாரண மக்களுக்கும் புரியும் விதத்தில், அழகுத்தமிழில் சுவாரஸ்யமாக தந்திருக்கிறார். கர்நாடக வித்வான்களுடன் இசை சகோதரர்கள் கொண்டிருந்த தொடர்புகளை இணைத்திருப்பதன் மூலம் அந்தந்த வித்வான்களின் சிறப்பியல்புகளையும் அறிய முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 22/1/2014.