வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம் (ஆய்வுக்கோவை), எட்டுதொகுதிகள், பதிப்பாசிரியர்கள்-முனைவர் ந.வெங்கடேசன், முனைவர் தெ.மேகநாதன், முனைவர் இரா. சதாசிவம், வெளியீடு-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பக். 2038.

தமிழ் இலக்கியத்தின் நாடளாவிய தன்மைக்கு எடுத்துக்காட்டு ஒம் நமோ நாராயணாய் எனும் எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில், எட்டுத் தொகுதிகளுடன் வெளியிடப்பட்ட நூல். நானூற்று நான்கு கட்டுரைகளுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுடன் வெளிவந்துள்ள இந்த நூல், வைணவ இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல். வைணவ இலக்கியங்களான நாலாயிரத்திவ்ய பிரபந்தம், பாகவதம், ராமாயணம் முதலான இலக்கியங்களில் வெளிப்படையாகத் தோன்றும் கருத்துகளையும், உணர்த்துப்பட்டுள்ள கருத்துகளையும் வெளிப்படுத்தும் வகையில் கட்டுரைகளும் அமைந்துள்ளன. தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் தமிழ்ப்பிரிவின் வெளியீடாக வந்துள்ள இந்த நூல், பக்தி இலக்கியத்தைச் சுவைக்க விரும்புகிறவர்களும், ஆய்வு செய்ய விரும்புகிறவர்களுக்கும் களஞ்சியமாக அமைந்துள்ளது. வைணவத்தில் உள்ள நூற்று எட்டு திவ்ய தேசங்களில் பெரும்பாலானவற்றின் வரலாறும், திருமாலின் பெருமைகளும், படிப்போரை இழுத்துச் செல்லும்வகையில் விளக்கப்பட்டு உள்ளன. கண்ணனது வரலாற்றுடன் இணைந்து உள்ள தமிழ்த் தன்மைகளையும், தமிழ்ப்பெயர்களையும் படிக்கும்போது, கண்ணன் வடமதுரையில் பிறந்தவனா, தென் மதுரையில் பிறந்தவனா என எண்ணத்தோன்றுகிறது. தமிழரின் மாநிறமே கண்ணனின் கறுப்பு நிறம் என உணர்த்தும் ஆய்வு தமிழ் இலக்கியத்தின் நாடளாவிய தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தமிழ் ஆய்வின் தற்கால நிலையை விளக்கும்வகையில் பதிக்கப்பட்டுள்ள இந்நூல், தமிழ் இலக்கிய ஆர்வலர்களாலும், அனைவராலும் படிக்கத் தகுந்தவை. -முகிலை இராசபாண்டியன். நன்றி: தினமலர், 15/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *