வ.உ.சி. பற்றி ம.பொ.சி.
வ.உ.சி. பற்றி ம.பொ.சி., சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், தொகுத்தவர்- ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. பதிப்பகம், பதிவு எண் 482/2010, 4/344 ஏ, சீஷெல் அவென்யூ, அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை – 41, பக்கம் 97, விலை 65 ரூ.
வ.உ.சி. யை என் அரசியல் தந்தை என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பெருமைபடக் கூறுவார். அவர் எத்தனையோ நூல்களை எழுதியிருந்தாலும், முதன் முதலில் எழுதி வெளியிட்ட நூல், கப்பலோட்டிய தமிழர் என்பதுதான். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முதல் தமிழர் வ.உ.சி. தான். அவர் சிறை சென்ற தியாகி மட்டுமல்ல. வெறும் தேசபக்தர் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசியல் கலப்புடைய வேலை நிறுத்தத்தை தூத்துக்குடி ஹால்லிமில் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தி வைத்த தொழிற்சங்கவாதி. தமிழ்புலவர், கவிஞர் இப்படி வ.உ.சி.யின் பன்முகச் சிறப்பை உலகறியச் செய்தவர் சிலம்புச் செல்வர். இந்நூலில் அவர் அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும் பேசிய பேச்சுக்கள், அவர் நடத்தி வந்த, ‘செங்கோல்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள், இவை யாவற்றையும் தொகுத்துத் தந்திருக்கிறார் ம.பொ.சி.யின் இளைய மகள். தமிழர்கள் அனைவரும் குறிப்பாக, எல்லா கட்சிகளிலும் உள்ள, இளம் அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய நூல். – மயிலை சிவா
—
A STRUGGLE FOR FREEDOM IN THE REDSOIL OF SOUTH, மு. பாலகிருஷ்ணன், பாரதி பப்ளிகேஷன்ஸ், 80 (45டி) ஓவர்சியர் தெரு, சிவகங்கை – 630561, பக்கம் 282, விலை 200 ரூ.
சிவகங்கைச் சீமை பற்றிய சிறந்த வரலாற்று நூல். பலருடைய வீரவரலாறுகளை அழகாகத் தொகுத்துத் தந்துள்ள ஆசிரியரின் உழைப்பு பாராட்டுக்குரியது. சிவகங்கைச் சீமையை ஆட்சிபுரிந்தவர்கள், விடுதலைக்குப் போராடிய வீரர்கள் ஆகியோரின் வரலாற்றினைக் கால வரிசையில் ஆராய்ந்துள்ளார். சிவகங்கையின் முதலாம் அரசராகத் திகழ்ந்த சசிவர்ணப்பெரிய உடையத்தேவர், மூத்துவடுக நாதர், வேலுநாச்சியார், மருதுசகோதரர்கள் போன்றோரின் வீரவரலாறுகள் சான்றுகளுடன் தெளிவாக எழுதப் பெற்றுள்ளன. ஆங்கிலத்தில், எளிய நடையில் படிப்போர் மனம் கொள்ளுமாறு ஆசிரியர் எழுதியுள்ளார். மருது சகோதரர்களின் கலைப் பணிகள், சமுதாயப் பணிகள் விவரிக்கப்பெற்றுள்ளன. கோயில்களுக்கென அமைக்கப்பெற்றுள்ள அறக்கட்டளைகளின் பட்டியல் கொடுக்கப்பெற்றுள்ளது. திருக்கோயில்களுக்குப் பயணம் செல்பவர் தங்குவதற்கென சிவகங்கை, காளையார் கோவில், திருப்பத்தூர் முதலிய ஊர்களில் கட்டப்பெற்றுள்ள சத்திரங்களின் பட்டியலும் சேர்க்கப்பெற்றுள்ளது. இறுதியில் எல்லா வரலாற்று விவரங்களையும், காலவரிசையில் ஆண்டுகளைக் குறிப்பிட்டு பட்டியலிடப்பெற்றுள்ள முறை நன்று. பெருமுயற்சி செய்து, படங்கள் தொகுத்து வெளியிடப்பெற்றுள்ளன. வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல். – ம. நா. சந்தானகிருஷ்ணன் நன்றி: தினமலர் 18/3/12