ஸந்தேக நிவாரணீ (பாகம் 7)
ஸந்தேக நிவாரணீ (பாகம் 7), நன்னிலம் வை. ராஜகோபால கனபாடிகள், வைதிகஸ்ரீ, சென்னை, பக். 232, விலை 150ரூ.
ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்களுக்கு மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கும் விதமாக, சென்னையில் ஆங்காங்கே நடைபெறும் கூட்டங்களில் அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் நூலாசிரியர் வை. ராஜகோபால கனபாடிகள். ஆறு பாகங்களில் 500 கேள்விகளுக்கு விடையளித்துள்ள அவர், இந்த ஏழாவது பாகத்தில் 157 சந்தேகங்களுக்கு விடையளித்துள்ளார். தெய்வ வழிபாடு, பூஜை, ஹோமம், விளக்கேற்றுதல், மந்திரம், ஜபம், பாராயணம், வாஸ்து, மங்கல நிகழ்ச்சிகள், கனவு, ஜோதிடம், பஞ்சாங்கம், பரிகாரங்களில், பித்ருபூஜை, மஹாளயம் ஆகிய தலைப்புகளில் பதிலளித்துள்ளார். பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைக்கும்போது சரியாக உடையாவிட்டால் தோஷம் என்ற சிலரின் பயமுறுத்தலுக்கு விளக்கம் அளித்துள்ளார். குருபலம் வந்துவிட்டதா என்பதை அறிவதற்கான வழி, குழந்தை பாக்கியத்துக்குப் பரிகாரம் கர்ப்ப காலத்தில் கர்ப்பம் தங்க என்ன செய்யலாம், சுகப் பிரசவம், பாலாரிஷ்டம், பெண்கள் ஆலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யலாமா என்பதற்கு விளக்கம், கர்ப்பிணிகள் வரலட்சுமி விரதம் மேற்கொள்ளலாமா? ஓர் ஊரில் ஒரு தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு வேறொரு ஊரில் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றலாமா? என்பன போன்றவற்றுக்கு பதில் அளித்துள்ளார். இவர் அளித்துள்ள பதில்கள் பெரிய அளவில் சாஸ்திர அறிவெல்லாம் தேவைப்படாத சாதாரண மக்களும் மனத்தில் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருப்பது சிறப்பானது. சில முக்கிய பதில்களில் தகுந்த சாஸ்திர மேற்கோள்கள் சமஸ்கிருதத்திலும் தமிழ் விளக்கமும் அளித்திருப்பது இந்த நூலின் வெற்றி. ஆன்மிக அன்பர்களுக்கு பயனளிக்கும் சிறந்த தொகுப்பு. நன்றி: தினமணி, 2/6/2014.
—-
உடல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள், டாக்டர் கு. கணேசன், குமுதம் பப்ளிகேஷன்ஸ், விலை ரூ. 120.
உடலில் வைட்டமின்கள் குறைந்தாலும், அதிகமானாலும் பலவிதமான நோய்கள் உண்டாகும். அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? நன்றி: குமுதம், 4/6/2014.