ஸ்பெக்ட்ரம் சர்ச்சை
ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார் பேட்டை, சென்னை 18, விலை 40ரூ To buy this Tamil book onnline – www.nhm.in/shop/978-81-8493-625-4.html
உலகையே மலைக்க வைத்த ஊழல். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு பெரும் அதிர்ச்சி தோல்விக்குக் காரணமாக இருந்த ஊழல். இதையும் மிஞ்சி ஒரு ஊழல் உலகில் இனி நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படும் ஊழல்… என்று பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஊழல். ஸ்பெக்ட்ரம் ஊழல், சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஊழல் விவகாரத்தின் முழுமையான பின்னணியை இந்நூல் விளக்குகிறது. அதாவது ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? அதற்கு முன் ஸ்பெக்ட்ரம் பற்றி புரிந்து கொள்வதற்கான அறிவியல் விளக்கம். இந்த ஸ்பெக்ட்ரம் எப்படி பங்கீடு செய்யப்படுகிறது? ஏலம் எப்படி விடப்படுகிறது? அதில் ஊழலுக்கான சாத்தியங்கள் எங்கே இருந்து வருகிறது? இதில் அரசியல்வாதிகளுக்கும், தொழில் துறையினருக்கும் இடையே எப்படி ஒப்பந்தம் உருவாகிறது? இந்த ஊழல் குறித்து சி.ஏ.ஜி. ரிப்போர்ட் என்ன சொல்கிறது? உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்துள்ளதா, இல்லையா… இப்படி பல தகவல்களை இந்நூல் புள்ளி விபரங்களோடு விளக்குகிறது. -பரக்கத். நன்றி : துக்ளக் 12/10/2011. ——
ஆன்மிக வினா விடை, (ஐந்தாம் பாகம்), சுவாமி கமலாத்மானந்தர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் 641020, விலை 70ரூ,
ஸ்ரீராம கிருஷ்ண விஜயம் என்ற ஆன்மிக மாத இதழில் 2000 முதல் 2004 வரை வெளியான ஆன்மிக வினா விடைகளின் தொகுப்பே இந்நூல். இதற்கு முன் வெளியான இந்நூலாசிரியரின் நான்கு பாகங்களும் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளதை முன்னிட்டு, ஐந்தாம் பாகமாக இந்நூல் வெளியாகியுள்ளது. இதுவும் ஹிந்து மதம் பற்றிய பொது அறிவு நூலாகும். இந்த நூலில் இறைவன், ஹிந்து மத தெய்வங்கள், மகான்கள், ஆன்மிகச் சாதனைகள், ஹிந்து மதச் சம்பிரதாயங்கள், ஒழுக்கம், அறம்… போன்ற அடிப்படை விஷயங்களும், அவை குறித்த வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஆசிரியர் அளித்துள்ள பதில்களும் எளிமையானவை. அப்பதில்களில் புராணங்கள், இதிகாசங்கள், ஞானிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவற்றைச் சுட்டிக் காட்டி விளக்குவதும் படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. மனிதனுக்கு ஆன்மிகம் ஏன் தேவை? மனிதன் இறைவன் ஆக முடியுமா? முக்தி என்றால் என்ன? இறைவனுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுவது ஏன்? 63 நாயன்மார்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன? சில கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிடுகிறார்களே இது சரியா… இப்படி சுமார் 630க்கும் மேற்பட்ட கேள்விகளுக்குரிய விடைகள் சுமார் 360 பக்கங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. – பரக்கத். நன்றி : துக்ளக் 28/09/2011.