ஸ்ரீ கருடபுராணம்
ஸ்ரீ கருடபுராணம், ஏ.கே. செல்வதுரை, கங்கை புத்தக நிலையம், சென்னை 17, பக். 224, விலை 80ரூ.
பெருமாள் கோவில்களுக்குச் செல்லும் எல்லாருடைய கண்ணையும் கருத்தையும் முதலில் கவர்வது ஸ்ரீ கருடாழ்வாரும் ஸ்ரீ ஆஞ்சநேயரும்தான். இராமயணக்கதை அனைவருக்கும் தெரிந்திருப்பதால் ஆஞ்சநேயர் குறித்துப் பரவலாக நம் நாட்டவரும் வெளிநாட்டவரும்கூட தெரிந்து வைத்துள்ளனர். நம்மவருக்கே அதிகம் தெரியாதவர் உண்டென்றால் அது கருடாழ்வார்தான். அவருடைய பிறப்பு, வளர்ப்பு, பெருமாளிடத்தில் அவர் கொண்ட பக்தி, பெருமாள் அவரிடம் கொள்டுள்ள அன்பு என்று அனைத்தையும் இந்த நூலில் எளிமையாக, கோர்வையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். இந்நூலை அவர் எழுத்துப் பணிக்காகச் செய்யாமல் தன்னுடைய உள்ளத்திலேயே ஊறிய ஆசையால் இளம் வயது முதல் தன்னை ஈர்த்த கருடனைப் பற்றிய அரிய தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கிறார். இந்த நூலைப் படித்துவிட்டு இனி பெருமாள் கோயில்களுக்குச் சென்றால் கருடன் சந்நிதியில் சில நிமிஷங்கள் கூடுதலாக நின்று வணங்கிவிட்டு அவருடைய கீர்த்தியை அசைபோட்டபடி செல்வோம் என்பது நிச்சயம். ஸ்ரீ கருடாழ்வாருக்குத் தமிழ்நாட்டு கோயில்களில் உள்ள சிறப்பு, சந்நிதிகள் பற்றிய தகவல்கள் படிக்கப் படிக்க பரவசமூட்டுபவை. நன்றி: தினமணி, 13/5/2013.
—-
இனிய மார்க்கம் இஸ்லாம், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-9.html
தினத்தந்தி ஆன்மிக மலரில் இனிய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அகமது எழுதிய 32 வார தொடர் கட்டுரைகள் நூலாக வெளிவந்துள்ளது. இதில் இஸ்லாமிய மார்க்கத்தின் கடமைகளையும், விருந்தோம்பல், உணவு உண்ணும் முறை, பெற்றோர் அண்டை வீட்டாருடன் நடந்து கொள்ளும் முறை உள்ளிட்ட வாழ்க்கை நெறிமுறைகளையும் எல்லோரும் புரியும்வகையில் ஆசிரியர் எழுதி உள்ளார். மனிதனின் இரு உலக வாழ்க்கையின் வெற்றிக்கு இந்நூல் வழிகாட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 18/9/2013.