ஹைகூ வானம்
ஹைகூ வானம், வீ. தங்கராஜ், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 104, விலை 60ரூ.
அவன் தைத்த செருப்பில் ஊரே நடக்கிறது அவனுடையது கக்கத்தில் தங்கராஜின் ஹைகூவில் ஒரு பருக்கை பதம் இது. மெல்லப்போ தென்றலே வழியில் கருவேல மரங்கள். இந்த ஹைகூ உணர்த்தும் காட்சி மிகப் பெரியது. விரித்து எழுதினால் ஒரு ஆயிரம் பக்கங்களுக்கு இதை எழுத முடியம். அதை மூன்றடியில் அளந்திருக்கிறார் கவிஞர். ஹைகூ எழுதுவது கடினமான பணி. அது ஆசிரியருக்கு எளிதில் கைகூடியிருக்கிறது. ஹைகூவிலும் சமூக விமர்சனத்தை உள்ளடக்க முடியும் என்பதை பல கவிதைகளில் நிரூபித்திருக்கிறார்.
—-
மகாகவி ஷேக்ஸ்பியரின் ஆண்டனியும் கிளியோபாட்ராவும், நா. ரமணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர் எஸ்டேட், சென்னை 98, பக். 212, விலை 150ரூ.
காதலுக்கு இலக்கணம் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவக்கூடிய நாடகம் இது. காதலர்கள் அன்பின் ஆழத்திற்குள் போகப் போக கருத்து வேற்றுமைகள் வெடித்துத் தூள் தூளாகும் என்பதை ஆண்டனி கிளியோபாட்ராவின் ஒவ்வொரு சந்திப்பிலும் நிறுவுகிறார். ஒரு காதல் வெற்றியடைய வேண்டுமானால், காதல் காதலர்களை வெல்ல வேண்டுமா? அல்லது காதலர்கள் காதலை வெல்ல வேண்டுமா? இந்தக் கேள்விக்கான விடைதான் ஷேக்ஸ்பியரின் இந்த நாடகம். வீரன் ஆண்டனி, கருப்பழகி கிளியோபாட்ராவிடம் போர்க்களத்தில் ஆயுதம் இழந்து தவிக்கும் வீரன்போல் தவிக்கும் தவிப்புதான் படிப்போரை மேலும் மேலும் உலுக்கி எடுக்கிறது. மொழி பெயர்ப்பாளர் ரமணியின் தெளிவான நுணுக்கமான தமிழாக்கம் கூடுதல் சிறப்பு. -இரா. மணிகண்டன் நன்றி: குமுதம் 03/01/13.