இவ்வுலக இன்பமா? அவ்வுலக வீடுபேறா?

இவ்வுலக இன்பமா? அவ்வுலக வீடுபேறா?, திருக்குறள் ஆய்வுச் செம்மல் ஆ.ரத்தினம், கலைக்கோ வெளியீடு, தமிழ்குடில், 3/404ஏ, 13வது தெரு, ராம்நகர் தெற்கு, மடிப்பாக்கம், சென்னை 91, பக்கங்கள் 246, விலை 125ரூ.

எல்லா பொருளையும் தன்னகத்தே கொண்டு மக்களுக்கு நல்வழி காட்டும் திருக்குறள், மனிதராற்றுப்படை என திகழ்கின்றனது. திருக்குறள் ஆய்வுநூல்கள் நான்கினை வெளியிட்டுள்ள ஆசிரியர் ஆ. ரத்தினத்தின் ஐந்தாவது நுல் இது. திருக்குறள் உரைகள், ஆய்வு நூல்கள் பலவற்றை ஒப்புநோக்கி ஆய்வுசெய்து இந்நூலினை எழுதியுள்ளார். அறம், பொருள், இன்பம் பற்றி பாடியுள்ள வள்ளுவர் பெருமாள், வீட்டுப்பால் என பாடாமைக்கு காரணம் வீடு (முக்தி) பற்றி அவருக்கு உடன்பாடில்லை என்று கூறும் நூலாசிரியர் இதுகுறித்த பிறர் கருத்துக்களை சான்று காட்டி மறுத்துள்ளார். சமண முனிவர்கள் பலரால் பாடப்பெற்ற தொகுப்பு நூலே திருக்குறள் என்போரின் கூற்றினையும் தக்க முறையில் மறுத்துள்ளார். நிலையாமை முதலான நான்கு அதிகாரங்கள் வீடு பற்றியவை என்போரையும் மறுத்துள்ளார். இயல்களின் பிரிவுகள் குறித்து உரையாசிரியர்கள் மாறுபடுவதை விளக்கியுள்ளார். திரு.வி.க. வ.உ.சி, மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், நாமக்கல் கவிஞர் வ.சு.ப. மாணிக்கனார் போன்றோரின் கருத்துக்களை ஒப்பிட்டு விளக்குகின்றார். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, திருக்குறளார் வி. முனுசாமி, பரிமேலழகரை சாடியதுபோல, இவரும் பரிமேலழகரின் கருத்துக்களை மறுத்துள்ளார். திருக்குறள் உணர்த்துவது அவ்வுலக வீடுபேறு அல்ல, இவ்வுலக இன்பமே என்பதே நூலாசிரியரின் கருத்தாகும். இது ஒரு ஆய்வு நூல், சிறந்த நூல். – பேரா.ம.நா. சந்தானகிருஷ்ணன்.

—–

அகத்தியார் முதல் வாரியார் வரை 60 சித்தர்கள் வாழ்வும் வாக்கும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 17, பக்கங்கள் 256, விலை 225ரூ

சித்தத்தின் உள்ளே சிவத்தைக் கண்டவர்கள் சித்தர்கள். இவர்கள் சாதாரண மானுட வாழ்வுக்கும் பார்வைக்கும் அப்பாற்பட்டு தெய்நிலை பெற்றவர்கள். வாழும்போதே ஞானம் பெற்றதால், சகல ஷக்திகளும் பெற்று சித்தராய் ஆனவர்கள். அகத்தியர், குதம்பை சித்தர், பட்டினத்தார், திருமூலர், போகர், காஞ்சி மாமுனிவர், வாரியார் உட்பட 60 சித்தர்களின் அற்புத வாழ்வையும், அவர்கள் ஞான உபதேசத்தையும் தெளிவாக இந்நூல் தந்துள்ளது. புதுக்கோட்டை சாந்தானந்த சுவாமிகள், புவனேசுவரி கோவில், சேலம் கந்தாசிரமம், கொல்லிமலை சேந்தமங்கலத்தில் தத்தாத்ரேயர் கோவில், சேலையூரில் கந்தாஸ்ரமம் ஆகிய கோவில்களை நிறுவி, பற்பல யாகங்கள் செய்து சித்தி பெற்று முக்தி பெற்ற செய்தி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 179 ஆண்டுகள் கடும் தவம் புரிந்த வள்ளியூர் முத்துகிருஷ்ண சுவாமிகள், தண்ணீரில் ஜலசமாதி ஆகி உருவத்துடன் நீரில் கரைந்த தென்னம்பாக்கம் அழகப்ப சுவாமிகள் ஆகியோர் வரலாறு மிக அற்புதமானவை. தில்லையில் ஓடாத தேரை தன் பாடலால் ஓட வைத்த திருமாளிகைத் தேவர், பசுவின் கண்ணீரை மாற்ற மாடு மேய்க்கும் இடையன் மூலம் உடம்பில் புகுந்த திருமூலர், பழநியில் முருகன் உருவச் சிலையை நவபாஷாணத்தால் உருவாக்கிய போகர், பாம்பு பிடிக்கும் தொழிலில் இருந்து ஞானம் பெற்று உயர்ந்த பாம்பாட்டி சித்தர், கழுமரம், வாழை மரத்தை பாடி எதிர்த்த பட்டினத்தார் ஆகிய சித்தர்களின் வரலாறுகள் வாசகர்களை சிலிர்க்க வைக்கும். நம்பிக்கையுடன் இந்நூலை படித்தால் நாமும் சிந்தனை வளம் பெறலாம். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 26 பிப்ரவரி 2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *