அன்புள்ள அம்மா
அன்புள்ள அம்மா, மணவை. பொன். மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 278, விலை 160ரூ
அம்மாவே தெய்வம், உலகிலே அம்மாவைக் கொண்டாடாதவர்கள் யார்? எழுபத்தைந்து வெற்றியாளர்கள் தங்கள் அன்னையரைப் பற்றிச் சொல்லும், போற்றுதல் கட்டுரைகள் அடங்கிய அருமையான தொகுதி. திலகவதி ஐ.பி.எஸ்., தன் அம்மா பற்றிச் சொல்வதைக் கேளுங்கள். அவர் அம்மாவுக்கு எழுதிய கடிதத் தகவல் சுவையானது. அப்பா பார்த்த ஜாதகப்படி எனக்கு திலகவதி அம்மையார் என்று பெயர் சூட்டினர். பள்ளியில் என் பெயரை, ஆசிரியர் அழைக்கும்போதெல்லாம் மாணவிகள் மத்தியில் கேலியும், கிண்டலும்தான். நீயும் அப்பாவும் சமயக்குரவர் திருநாவுக்கரசரான அப்பரின் சகோதரியும், அறுபத்து மூவரில் ஒருவருமான, திலகவதியாரின் பெயரை வைத்திருக்கிறேன் என்று சமாதானம் சொல்வீர்கள் அம்மா. படி, படி, படித்துக்கொண்டே இரு என்று, அன்று நீ போதித்த தாரக மந்திரம்தான், என்னை வழி நடத்திச் செல்கிறது. – எஸ். குரு.
—-
பூமியை பாதுகாப்போம், நடாலியா மார்ஷல், தமிழில்-கொரட்டூர் கே.என்.சீனிவாஸ், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, பக்கங்கள் 240, விலை 120ரூ.
இப்போது எல்லார் வாயிலும் அடிபடும் வார்த்தை குளோபல் வார்மிங். அதாவது நம் பூமி சூடாகி வருகிறதாம். எப்படி? தானாகவே சூடாகி வருகிறதா என்ன? இல்லை… இதில் வசித்துக் கொண்டிருக்கும் நாம்தான் பூமிக்கு சூடேற்றிக் கொண்டு இருக்கிறோம். நம் சுகபோக வாழ்க்கைக்காக ஏற்படுத்திக் கொண்ட வசதிகளால் ஏற்படும் பாதிப்பு இது. பூமி நெருப்புப் பந்தாக மாறாமல் இருக்க, பசுமை சூழல் நிறைந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ, 52 யோசனைகளை சொல்லுகிறது இந்த புத்தகம். – சிவா.
—-
தமிழகம் ஊரும் பேரும், ரா. சேதுப்பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 35, பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, பக்கங்கள் 288, விலை 140.
அறுபது ஆண்டுகளுக்கு முன். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய நூல் பள்ளி கல்லூரிகளில் பாடமாக இடம் பெற்ற சிறப்பைப் பெற்ற நூலாகும். ஒவ்வொரு ஊரின் பெயருக்குப் பின்னால் உள்ள காரண, காரியங்கள் படித்துப் பார்க்கையில் வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். இதை ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எடுத்து விளக்கியுள்ள பாணி மிகவும் சுவாரஸ்யமானது. ரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடைத் தமிழ் கவிதை நடையை நினைவுபடுத்தும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்களின் தனிச்சிறப்பை விளக்கிக் கூறும் எளிய புத்தகம் இது. – ஜனகன் நன்றி :தினமலர் 25, மார்ச் 2012.