ஊமைத்துரை வரலாறு
ஊமைத்துரை வரலாறு, வே. மாணிக்கம், மகிழ் பதிப்பகம், 4ஆ, பக்தராய் பணிவார் தெரு, பாளையங்கோட்டை 627002, பக்கங்கள் 102, விலை 70ரூ.
இந்திய விடுதலை வரலாற்றில், கயத்தாற்றில் தூக்குத்தண்டனை பெற்ற கட்டபொம்மனின் வரலாறு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பகுதி. கட்ட பொம்மனின் இளவல் ஊமைத்துரையின் பங்களிப்பு இந்த வரலாற்றோடு இணைந்ததுதான் என்ற போதிலும், பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்ததாகச் சொல்ல முடியாது. வே. மாணிக்கம் ஊமைத்துரையின் வீரவரலாற்றை, ஆவணங்களின் துணையுடனும் நேரடி தொடர்பு கொண்டு ஆய்வு நோக்கி எழுதியிருக்கிறார். நல்ல பணி, பாராட்டுக்குரியவர். அவசியம் வாசிக்க வேண்டிய வரலாற்று ஆவணம் இது. – ஜனகன்
—-
கறுத்த மக்களின் உரத்த குரல்கள், எஸ். ஜெகத்ரட்சகன், புலவர் கோவேந்தன் நினைவு அறக்கட்டளை, கல்வி இலக்கிய மேம்பாட்டு நூல் வெளியீட்டு மையம், 30, திருவள்ளுர் நகர், மூன்றாம் கட்டளை, சென்னை 600122, பக்கங்கள் 148, விலை 75ரூ. மூவாயிரம் ஆண்டு கறுப்பர்களின் முனகல் முதல் பெரூமூச்சுவரை, முழக்கம் முதல் விடுதலை வெற்றி வரை, தளைப்பட்டுக்கிடந்தது முதல் தளையை முறித்துத் தலை நிமிர்ந்ததுவரை, நிறத்தால் ஒன்றுபட்டுப் பல்வேறு மொழியாலும், குலத்தாலும் வேறுபட்டிருந்தாலும் நெஞ்சுணர்வால் ஒருமைகொண்டு வரலாற்றுக் காலத்திலிருந்து இன்று வரை பற்பல பாவர்களின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு மொழிப்பாலமாக்கி கறுத்த இன மக்களின் காலக்குரலின் ஊர்திகளை நம் நெஞ்சமனைக்குள் அழைத்து வந்துள்ளார் ஆசிரியர். 92 கவிதைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. நூல் முகப்பு, அச்சமைப்பு சிறப்பாக அமைந்துள்ளன. -எஸ். திருமலை.
—-
இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள், எம்.ஆர்.ரகுநாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 600017, பக்கங்கள் 200,விலை 100ரூ.
அண்ணாதுரை ஒரு சமுதாய சீர்திருத்தவாதி. அரசியல் தலைவர், சிறந்த இலக்கியப் படைப்பாளி. அவர் தம் வாழ்நாளில் எழுதிய கடிதங்கள் இன்று இலக்கியம் பேசும் கடிதங்களாக விளங்குகின்றன. அன்புள்ள தம்பிக்கு என்று அவர் திராவிட நாடு, இதழ்களில் எழுதிய கடிதங்களை இலக்கியப் பார்வையுடன் விமர்சனம் செய்கிறார் எம்.ஆர். ரகுநாதன். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒன்றே குலம், ஒருவனே தேவன். வாழ்க வசவாளர். தடைக்கற்கள் படிக்கற்கள் ஆகட்டும். வீட்டுக்கோர் புத்தக சாலை அமைத்துக் கொண்டால் நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும். என்றெல்லாம் அவர் சொன்ன பொன்மொழிகளைப் பட்டியலிடுகிறார். சிறந்த இலக்கிய விருந்து. – எஸ்.குரு. நன்றி: தினமலர் 22 ஜனவரி 2012.