உணர்வும் உருவமும்,(அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்),
உணர்வும் உருவமும்,(அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்), தொகுப்பாசிரியர், ரேவதி, அடையாளம் சங்கமா, 1205/1, கரூப்பூர் சாலை, புத்தானந்தம்-621310, பக்கங்கள் 115, விலை 65ரூ.
தமிழில் திருநங்கையரைப் பற்றிய முதல் நூல் உணர்வும் உருவமும் என்ற நூலாகும். பல அரவாணிகளின் வாழ்க்கை கதைகளின் தொகுப்பான இந்நூலை எழுதியுள்ள ரேவதி ஒரு அரவாணி. ஆண் பாதி, பெண் பாதியாகக் கொண்ட அர்த்த நாரீஸ்வரரை தெய்வமாக வணங்கும் இந்நாட்டில் அரவாணிகள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகின்றனர்? மகாபாரதத்தில் வரும் சிகண்டியை புரிந்து கொள்வோர் அரவாணிகளை ஏன் புரிந்து கொள்வதில்லை? ஆண் உடலைக் கொடுத்து பெண் உணர்வுகளைக் கொடுத்து…? கொழுப்பெடுத்து இந்த வேஷம் கட்டிக் கொள்ள வில்லை. நாங்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? என அடுக்கடுக்கா கேள்விகளை எழுப்புகிறார் ரேவதி. உணர்வும் உருவமும் நூல் 9 அத்தியாயங்களைக் கொண்டது. குழந்தைப் பருவத்திலேயே அரவாணிகள் தங்களைப் பெண்களாக உணர்ந்து அழகுபடுத்திக் கொள்வது பற்றியும் பள்ளிகளில் கேலி, கிண்டலுக்கு ஆளாவதும், வீட்டில் பெறோர் உடன்பிறந்தோரின் கோபத்திற்கு ஆளாவதும் பற்றியும் ரேவதி பல அரவாணிகளின் கதைகள் மூலம் விளக்குகிறார். குறிப்பாக பெற்றோரால் ஏற்றுக்கொள்ள இயலாததால் இளம் பருவத்தில் இவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சனைகள் மிகவும் அதிகம். சமுதாயமும் புரிந்து கொள்ள மறுக்கும்போது கல்விக்ற்க இயலாமல் வீட்டைத்துறந்து தங்களைப் போன்ற அரவாணிகளிடம் தஞ்சமடைவதைத் தவிர என்ன செய்யமுடியும்? நீளமாக முடி வளர்ப்பது, புடவை கட்டிக் கொள்வது என தங்களை முழுமையாகப் பெண்ணாக வெளிப்படுத்திக் கொள்ளவே அரவாணிகள் விரும்புகின்றனர். அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாத சூழலில் சமுதாயமும் புறக்கணிக்கும்பொழுது பாலியல் தொழிலை செய்யும் நிலைக்கு நிறைய அரவாணிகள் தள்ளப்படுகின்றனர். வனிதா என்ற அரவாணி இதைப் பற்றி குறிப்பிடுகையில், எங்கள் குடும்பம் வசதியற்றது. குடும்பத்தைக் காப்பாற்ற செக்ஸ் ஓர்க் பண்ண வேண்டி வந்தது… எனக்கு 16 வயதானபோது மூணு போலீஸ்காரர்களால் பலவந்தப்படுத்தப்பட்டேன் என்கிறார். வனிதாவைப் போல் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டவர்கள்தான் அதிகம். யாரும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை என்பது அழுத்தமாக இந்நூலில் பதிவாகியுள்ளது. அரவாணிகள் சிறந்த கலைஞர்கள். நடிப்பு, நடனம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் தொழில் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதை ரஜினி, ராஜம் சுந்தரி போன்ற அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகளில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. அரவாணிகளின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை உண்மையான அன்புக்கு அவர்கள் ஏங்குவதையும் அவர்களில் சிலருக்கு நல்ல துணைவர்கள் கிடைத்துள்ளனர் என்பதையும் விளக்குகிறது. ரஜினி என்ற அரவாணியின் கணவர் அவரிடம் அன்பாக இருந்தாரே தவிர அவரால் தம் குடும்பத்தினரை ஒரு அரவாணியை மருமகளாக ஏற்க வைக்க இயலவில்லை. அரவாணிகளில் அருணா என்பவர் நல்ல பிசினஸ்வுமன். பூனாவில் செக்ஸ் ஓர்க்கராக இருந்தவர் ஒரு நல்ல மனிதரை கணவராக ஏற்று நல்ல முறையில் குடும்பம் நடத்திவருகிறார். அரவாணிகளும் குழந்தைகளை தத்து எடுத்துக் கொண்டு தாய்மையை வெளிப்படுத்துவதாக இந்நூல் பதிவு செய்துள்ளது. அரவாணிகளின் குடும்பம் அவர்களுக்கிடையே உள்ள உறவுகள், பழக்கவழக்கங்கள், பூசைகள், சடங்குகளை தெளிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது. சுதா, அருணா, கோகிலா, சாந்தி ஆகியோர் ஆக்டிவிஸ்டுகளாக செயல்படுகின்றனர். நூலின் இறுதியில் தனது பின்னுரையில் பெருமாள் முருகன் தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள் பற்றிய கருத்துக்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அரவாணிகளை புரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. – பேரா. ஆர். சந்திரா.