தமிழ்க்காதல்
தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 625001, விலை 150ரூ.
காதல் உடலுக்கு நல்லது, உள்ளத்துக்கு நல்லது, ஊருக்கு நல்லது, உலகத்துக்கு நல்லது. அந்த நல்ல காதல், தமிழ்க்காதல். இதனை தலைப்பாக கொண்டு நூலாசிரியர் வ.சுப. மாணிக்கம் 7 தலைப்புகளில் அகத்திணையை மையமாக வைத்து எளிய நடையில் இலக்கிய நூலை எழுதியுள்ளார். தமிழர் கண்ட காதல் நெறியே அகத்திணையாகும். இதனை நம் முன்னோர்கள் முழுமையாக கற்றிருந்ததால், உலகையும், உடலையும், மனதையும், திருமணத்தையும் அவர்கள் மதித்ததால் அவர்களுடைய இல்லற வாழ்க்கை பூசல் இல்லாமல் இருந்தது என்ற உயரிய கருத்தையும் தெரிவித்துள்ளார். காதலையும் அதன் உணர்வையும் அதன் கல்வியையும் தெரிய வேண்டுமானால் தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள், திருக்குறள் நூல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்ற கருத்தையும் நூலாசிரியர் பதியவைத்துள்ளார். அனைவரும் படித்து வாழ்க்கையில் உயர்வதற்கான கருத்துக்களை கொண்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி 8/5/2013.
—-
ஆழ்வார்களும், இந்திய வைணவ இலக்கியங்களும், டாக்டர் கே. ஆர்.விட்டல் தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 450ரூ.
வைணவ இலக்கியம் பற்றிய முக்கிய நூல் இது. திருமாலை முழு முதல் கடவுளாகக் கொண்டது வைணவம். இதன் ஆன்மிகக் கருத்துக்களை, நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்ற பக்தி இலக்கியமாக தமிழுக்குத் தந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் சிறப்புகள், பன்னிரு ஆர்வார்களின் வாழ்க்கைக் குறிப்பு, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு பக்தி மார்க்கம், பயணித்தவிதம் ஆகியவற்றை அழகான மொழி நடையில் எடுத்துக்கூறுகிறார், டாக்டர் கே.ஆர்.விட்டல்தாஸ். அவருடைய கடின உழைப்பையும், ஆராய்ச்சித்திறனையும் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது. 846 பக்கங்கள் கொண்ட இந்தப் பெருநூலை, ஒரு பக்தி கலைக்களஞ்சியம் என்றே கூறலாம். நன்றி: தினத்தந்தி 8/5/2013.