தி.க.சி. நேர்காணல்கள்
தி.க.சி. நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்-வே. முத்துக்குமார், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி-4, பக். 188, விலை 140ரூ.
தி.க.சி.யின் 25 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு கால வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 75 ஆண்டு கால முற்போக்கு கலை, இலக்கிய வரலாற்றையும், விமர்சனப் போக்குகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. தி.க.சி.யின் விமர்சனங்கள், நேர்மையைப் பிரதிபலிப்பவையாக இருப்பவை. இத்தொகுப்பிலுள்ள நேர்காணல்களில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும், அவருடைய நேர்மைக்குச் சாட்சியமாக நிற்கின்றன. புதிய மனிதனுக்காக-புதிய வாழ்க்கைக்காக-புதிய கலாசாரத்துக்காக, கலை, இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். அந்த இலக்கியம் சமூக நலனுக்கும், மனித நல்வாழ்வுக்கும் போராடுவதற்குத் தேவையான உறுதியையும் நம்பிக்கையையும் அளிக்க வேண்டும் என்று இந்நூலின் ஆரம்பத்திலேயே அறிவிக்கிறார். அது மட்டுமின்றி, தனது கருத்துகள் விவாதத்துக்குரியவையாக இருப்பின் அவை விவாதிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, நெஞ்சை நெருட வேண்டும். படித்ததும் என்னவோ பண்ணுகிறது, படிக்கும் முன் இருந்த நான் வேறு, படித்த பின் இப்போதைய நான் வேறு என்கிற பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய ரசவாதம் எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும் என்கிறார் தி.க.சி. ஓர் எழுத்தாளனுக்குக் கலாப்பூர்வமான பொறுப்பு இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ, அவ்வளவுக்குச் சமுதாய பொறுப்புணர்வும் தேவை. மானட வாழ்வின் அடிப்படை நெறிகளை அவன் புறக்கணிக்கலாகாது என்று ஓர் இலக்கிய விமர்சகர் என்ற அடிப்படையில் தி.க.சி. கூறுவது நம்மை பிரமிக்க வைக்கிறது. தி.க.சி. என்ற இலக்கிய விமர்சகரின் கருத்துகளை மட்டுமல்ல தி.க.சி.எனும் ஆளுமையைப் பற்றியும் இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினமணி, 20/5/2013.
—-
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தலங்கள், கே. சாய்குமார், பக். 224, விலை 110ரு.
வேத முதல்வனாம் விநாயகப் பெருமான் புகழ், பெருமை, கருணை பற்றி நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. அவைகளிலிருந்து சற்று வித்தியாசமான, ஒரு புதுமையான நல்ல தரமான நூல் இது. நூல் முன்னுரை எனத் துவக்கி, பரிகாரத் தலங்கள், தல வழிகாட்டி, காசியில் உள்ள 56 கணபதிகள், பிள்ளையார் பற்றிய நூல்கள், அகர வரிசையில் தலவிவரம், விநாயகர், பற்றிய சப்த பிரஷ்னாக்கள் விளக்கம் என, நிறைவடைகிறது. இந்நூல் ஓர் அற்புதமான பயண வழிகாட்டி. -குமரய்யா. நன்றி:தினமலர், 19/5/2013.