ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும்
ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும், ஜெகதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-058-2.html
வைணவர்களால் போற்றி வணங்கப் பெறுபவரும், ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவருமான மகான் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை முறைப்படி தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் ஜெகதா. ஒன்றே குலம் என்று எல்லோரையும் சமமாகக் கொண்டாடிய உத்தமர் ராமானுஜர். குருவின் ஆணையையும் மீறி, திருக்கோட்டியூர் சவும்ய நாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி நின்று, எல்லோரையும் உரத்த குரலில் அழைத்து, குருவின் மூலம் தான் அறிந்த திருவெட்டெழுத்து மந்திர ரகசியத்தை உரக்கக் கூறினார். இதுகுறித்துக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பியிடம், இதனால் நரகம் பெற்றேன் என்பதறிவேன். அடியேன் நரகம் புகினும், இதைக் கேட்ட எல்லோரும் பரமபதம் புகுவரே என்பதால் இவ்வாறு செய்தேன் என்றார். பிறர் நலத்திற்காகத் தன்னலம் துறந்து, மகான் ஆனார் என்பது விரிவாக விளக்கப் பெற்றுள்ளது. இறுதியில், ராமானுஜரின் வாழ்க்கைக் குறிப்பு (ஆண்டுகளைக் குறிப்பிட்டு) கொடுக்கப்பட்டுள்ளமை நன்று. – பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன்.
—-
ஆகஸ்ட் 15, குமரி எஸ். நீலகண்டன், சாய் சூர்யா, ஆழ்வார்பேட்டை, சென்னை 18, பக். 490+12, விலை 450ரூ.
மகாத்மா காந்தியிடம் நான்காண்டு காலம் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்த வி. கல்யாணம் என்பவரின் அனுபவங்களை, தன் வரலாற போல இல்லாமல், சற்று வித்தியாசமான பாணியில், புதிய உத்தியில், ஒரு புதினம்போல எழுதியிருக்கிறார் நூலாசிரியர். பாராட்டுக்குரிய முயற்சி. வலைப்பூவில் சத்யா.காம், கல்யாணம்.காம் ஆகிய இரண்டும் கருத்துக்களை (நாட்டு நடப்புக்களை) பரிமாறிக் கொள்ளும் வகையில், நூலை வழிநடத்திச் செல்கிறார் ஆசிரியர். இன்றைய தினம் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கும் 90 வயது நிரம்பிய கல்யாணம்தான் இந்தப் புதினத்தின் கதாநாயகர். சத்யா என்ற 12 வயது நிரம்பிய ஒரு சிறுமி மற்றொரு கதாபாத்திரம். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவும், இன்றைய நவீன இந்திய ஜனநாயக ஆட்சியும் புதினத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படுகிறது. மகாத்மா காந்தியுடன் கல்யாணம் இருந்த நாட்கள் தொடர்பான பல ஆவணங்கள், புதினத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த புதின முயற்சி கவனிக்கப்பட வேண்டிய கவனத்திற்குரிய, புதிய துணிச்சலான இலக்கிய முயற்சி. -ஜனகன். நன்றி: தினமலர் 6/1/13.