கலீபாக்கள் வரலாறு
கலீபாக்கள் வரலாறு, வி.எம். செயது அகமது, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 75ரூ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு நல்லாட்சி புரிந்த அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி(ரலி) ஆகிய கலீபாக்களின் வரலாற்றையும் அவர்களுக்கு இணையாக நல்லாட்சி செய்த உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) வரலாற்றையும் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அகமது எழுதியுள்ளார். இந்த வரலாற்றுத் தொடர் தினத்தந்தி ஆன்மிக மலரில் வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அரசியல் வாழ்க்கையில் அறத்தைப் பேணி கலீபாக்களின் வரலாற்றை அழகுத் தமிழ் நடையில், எளிய முறையில் எழுதி இருப்பதால் நம்மை வாசிக்கத் தூண்டுகிறது. கலீபா பெருமக்களை நேசிக்கத் தோன்றுகிறது.
—-
திருவாரூர் பாபுவின் சிறுகதைகள், திருவாரூர் பாபு, சாந்தா பப்ளிஷர்ஸ், முத்துவிழா இல்லம், 13/5, ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 300ரூ.
நல்ல எழுத்தின் அடையாளம், வரிகள் வாய்க்குள் விரையும்போதே கண்ணில் அந்த சம்பவம் உட்கார வேண்டும். திருவாரூரபாபு எழுதிய சிறுகதைத் தொகுப்பில் அந்த மேஜிக் நடக்கிறது. நடந்த சம்பவங்களை கண் முன் பார்த்த உணர்வு கிடைக்கிறது. ரவுடிப் பெண்ணுக்கும் போலீஸ் அதிகாரிக்குமான மோதலைச் சொல்லும் அரெஸ்ட் கதையாகட்டும், அதிகாரத்தை பயன்படுத்தி தன் மகளின் காதலை அழிக்கப் பார்க்கும் போலீஸ் அதிகாரியை சாதுர்யமாக மடக்கும் பத்திரிகையாளரின் நான் நிருபர் கதையாகட்டும், ஹவுஸ் ஓணர் பெண்மணியிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் நடுத்தரக் குடும்பத்தின் சாபம் பலித்த ஆறாவது முறை கதையாகட்டும், ஒவ்வொன்றும் வெவ்வேறு கோணத்திலும் அணுகுமுறையிலும் அசரடிக்கின்றன. இப்போது பாபு கே.விஸ்வநாத் என்ற பெயரில் திரைப்பட இயக்குனராகி இருக்கிறார் திருவாரூர் பாபு. எனவே சினிமா பின்னணியிலான பல சிறுகதைகளும் சினிமாவின் இன்னொரு பக்கமாய் அமைந்து அட சொல்ல வைக்கிறது தரமான படைப்பு.
—-
மழை வேலி, சந்திரா மகேந்திரன், காவ்யா, 16 இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 140ரூ.
36 சிறுகதைகள் அடங்கிய நூல். நெஞ்சைத் தொடும் கதைகள். நன்றி: தினத்தந்தி, 3/7/2013