திருத்தொண்டர்கள்
திருத்தொண்டர்கள் (63 நாயன்மார் வரலாறு), வீ. தமிழ்ச் சேரனார், தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 256, விலை 120ரூ.
சைவ சமயத்தின் ஒப்பற்ற கருவூலமாக விளங்கும் பன்னிரு திருமுறை வரிசையில் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுவது பெரியபுராணம். தெய்வச் சேக்கிழார் அருளிய அப்பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு, 63 மூன்று நாயன்மார்களின் அருள் வரலாற்றை விரித்துரைக்கிறது இந்நூல். நாயன்மார்கள் பிறந்த ஊர், குலம் அவர்களுடைய சிவ பக்தியின் ஆழம், இறைவன் அவர்களைத் தடுத்தாட்கொண்டவிதம் எல்லாமே சுவைபட எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மானக்கஞ்சாற நாயனார், நமிநந்தி அடிகள், தாயனார் போன்றோரின் வரலாறுகள் படிக்கும்போதே சிலிர்ப்பை ஏற்படுத்துபவை. சில நாயன்மார்களின் வரலாறு (திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், காளத்திவேடர்) மிக நீளமாகவும், சிலரது வரலாறுகள் (சிறுத்தொண்டர், சோமாசி மாறர், திருமூலர்) மிக மிக சுருக்கமாகவும் அமைந்துவிட்டன. திருத்தொண்டர்களின் திருநட்சத்திரங்கள் பட்டியலும் பெரிய புராணப் பாயிரமும் பாயிர விளக்கமும் சுருக்கமான சேக்கிழார் வரலாறும்கூட இந்நூலில் உள்ளன. சேக்கிழார் பார்வையில் நாயன்மார்களை அறிய விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. நன்றி: தினமணி, 17/6/13.
—-
ஆஹா 50, குட்டி குட்டி ஓஹோ டிப்ஸ், கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங்ஸ், 47, என். பி. ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை ஒவ்வொரு பாகமும் 40ரூ.
சமையல் அறை, பூஜை அறை மற்றும் பெண்களுக்கான சிறு சிறு துணுக்குகள் அடங்கிய நூல். இரு பாகங்களாக வெளியிட்டுள்ளது.
—-
குழந்தைகளுக்கு பரமார்த்த குரு கதைகள், பாலமுருகன், சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, சென்னை 49, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-575-0.html
சிறுவர்களுக்கு எப்போதுமே பிடித்த பரமார்த்த குருவின் கதை கொஞ்சம் விரிவான கதைப்பின்னணியில் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. பெரியவர்களுக்கும் சிரிப்போடு பொழுது போகும். நன்றி: தினத்தந்தி, 19/6/13.