சமகால இந்தியச் சிறுகதைகள்
சமகால இந்தியச் சிறுகதைகள் (தொகுதி 4), ஷாந்தி நாத் கே. தேசாய், தமிழாக்கம்-மெஹர் ப. யூ. அய்யூப், சாகித்ய அகாடமி, ரவீந்திரபவன், 35, பெரோஷ் ஷா சாலை, டில்லி 110 001, பக். 512, விலை 325ரூ.
தமிழில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய வீடு சிறுகதை உட்பட சமகால இந்திய எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் ஆங்கிலம் வாயிலாகத் தமிழாக்கம் பெற்றுள்ளன. கே.எஸ். துக்கல் பஞ்சாபி மொழிக் கதையாசிரியர் அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வாடகை காரோட்டி சிறுகதையும் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இந்தியில் நிர்மல் வர்மாவின் பறவைகள், மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய சன்ன சின்ன நிலநடுக்கங்கள், ஒரியாவில் கோபிநாத் மொகந்தியின் அம்புப்படுக்கை போன்ற சிறுகதைகள் மனதில் தங்கும்படி உள்ளன. பல்வேறு வழிகளில் இச்சிறுகதைகள் படைக்கப்பட்டிருந்தாலும் கதையம்சம், சமூக அவலங்களின் வெளிப்பாடு, பெண்களின் இழிநிலை, குடும்பப் பிரச்னை போன்றவை ஒட்டுமொத்த இந்தியாவிலும், ஒரே மாதிரியாகத்தான் பரவிக் கிடக்கின்றன என்பது தெளிவாகிறது. மொழி பெயர்ப்புக் கதைகள் என்பதால் ஒவ்வொரு மொழி எழுத்தாளருடைய இயல்பான நடை, கற்பனையோட்டம் இவற்றை தாண்டி தான் சிறுகதைகளை படிக்க வேண்டியுள்ளது. அதனால் சிற்சில தொய்வுகளும் ஏற்படுகின்றன. எனினும் பிறமொழிப் படைப்புகளின் மூலம், இந்திய இலக்கிய வளர்ச்சியை நாம் ஒப்பிட்டு பார்க்க, இத்தகைய மொழி பெயர்ப்புகள் உதவும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 11/8/13.
—-
தீராத விளையாட்டு விட்டலன், அருண் சரண்யா, கல்கி பதிப்பகம், பக். 240,விலை 200ரூ.
பண்டரிபுரத்தில் எழுந்தருளியுள்ள பாண்டுரங்கனைத் தரிசிக்கச் சென்று வந்த நூலாசிரியர், அந்தப் புனிதப் பயண அனுபவங்களோடு, பாண்டுரங்கனின் மகிமைச் சரிதம் தொடர்பான சகல கதைகளையும் விவரித்து எழுதியுள்ளார். ஏராளமான வண்ணப்படங்களும் உள்ளன. -பவானிமைந்தன். நன்றி: தினமலர், 11/8/13.